விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 271 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா அதிரடியாக விளையாடி 39.5 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது.
இந்திய அணிக்கு விராட் கோலி 65*, ரோஹித் சர்மா 75, ஜெய்ஸ்வால் 116* ரன்கள் குவித்து வெற்றி பெறச் செய்தனர். அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி கடந்த வாரம் டெஸ்ட் தொடரில் தோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அப்போட்டியின் முடிவில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலியுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
கலாய்த்த கோலி:
அந்த வீடியோவில் விராட் கோலியை பின்னே வைத்துக் கொண்டு அர்ஷ்தீப் பேசியது பின்வருமாறு. “பாஜி, இன்று உங்களுக்கு இலக்கு போதுமானதாக இல்லை. இல்லையென்றால் இன்று நீங்கள் விளையாடிய விதத்திற்கு நிச்சயம் சதத்தை அடித்திருப்பீர்கள் என்பது போல் தெரிந்தது” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அதைக் கேட்ட விராட் கோலி. “நல்லவேளையாக நாம் இன்று டாஸ் வென்றோம். இல்லையென்றால் பனியின் காரணமாக நீ சதமாக அடிக்கப்பட்டிருப்பாய்” என்று அர்ஷ்தீப்பை கலாய்த்து தக்க பதிலடி கொடுத்தார். அதாவது இத்தொடரில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு காரணமாக 2வதாக பந்து வீசும் அணியின் பவுலர்கள் சிறப்பாக ரன்களை வாரி வழங்கினார்கள்.
குண்டாக விரும்பல:
எடுத்துக்காட்டாக கடந்த போட்டியில் இந்திய பவுலர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவரில் 85 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமானது. அதே போல ஒருவேளை 3வது போட்டியிலும் இந்தியா டாஸ் வெல்லாமால் 2வதாக பந்து வீசியிருந்தால் உனக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 100 ரன்கள் அடித்திருக்கும் என்று அர்ஷ்தீப்பை கலாய்க்கும் வகையில் விராட் கோலி பேசினார். அதைக் கேட்டு அர்ஷ்தீப் சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆவது இந்திய வீரராக ஹிட்மேன் ரோஹித் சர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை
மற்றொரு தருணத்தில் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விசாகப்பட்டினம் மைதானத்தில் கேக் வைக்கப்பட்டிருந்தது. அதை வெட்டிய ஜெய்ஸ்வால் சிறிய துண்டை விராட் கோலிக்கு ஊட்ட முயற்சித்தார். அதற்கு முதலில் ரோஹித் சர்மாவிடம் கொடு என்று விராட் கோலி சொன்னார். அதைக் கேட்டு கேக்கை ஊட்டச்சென்ற ஜெய்ஸ்வாலிடம். “வேண்டாம், இதைத் தின்றால் மீண்டும் நான் குண்டாகி விடுவேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன ரோஹித் சாப்பிட மறுத்து விட்டார். அந்தளவுக்கு அவர் தன்னுடைய ஃபிட்னஸில் தற்போது கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.



