
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்களுக்கு அடுத்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடுங்க 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் தேதி துவங்கியது. ராஞ்சியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அப்போட்டியில் இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த 2008 முதல் அவர்கள் இந்தியாவுக்காக ஜோடியாக விளையாடி வருகிறார்கள். இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர்கள் இந்தியாவுக்காக மொத்தம் 392* போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை விராட் – ரோஹித் படைத்துள்ளனர். இதற்கு முன் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தியாவுக்காக 391 போட்டிகளில் இணைந்து விளையாடியதே முந்தைய சாதனை. அவர்களுடைய வரலாற்றுச் சாதனையை தற்போது விராட் – ரோஹித் உடைத்துள்ளார்கள்.
இந்த 392 போட்டிகளில் அவர்கள் பேட்டிங்கில் 7832 பார்ட்னர்ஷிப் ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வெல்வதற்கு அவர்கள் முக்கிய பங்காற்றினர். 2024 டி20 உலகக்கோப்பையில் ஓப்பனிங் ஜோடியாக அவர்கள் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதை மறக்க முடியாது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி அரையறுதிப் போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் கேப்டனாக ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவியினர். அந்த வகையில் அடுத்ததாக அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் ஓய்வு பெற விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடியாக இவங்க நல்லாருப்பாங்க.. டாப் 4க்கு 5 பேர் போட்டி.. அஸ்வின் பேட்டி
அதற்கு முன் அவர்களை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட முயற்சிக்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காத அவர்கள் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்த தங்களை ஃபிட்டாக வைத்து உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.