ஐபிஎல் ஜெய்க்கலன்னு சொல்பவர்களுக்கு சமர்ப்பணம்.. யுவராஜுக்கு சமமாக உலக நாயகனாக விடை பெற்ற கோலி

Virat Kohli 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் அவர் 76 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மேலும் 2012, 2014, 2016, 2021, 2022 ஆகிய டி20 உலகக் கோப்பைகளில் விராட் கோலி தோல்வியை சந்தித்தார். ஆனால் 6வது முயற்சியில் சச்சின் போல கோப்பையை வென்ற அவர் சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

உலக நாயகன் கோலி:
இருப்பினும் தற்போது 35 வயதாகும் அவர் இந்தியாவின் நலனைக் கருதி வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். ஆனால் இதுவரை அவர் ஒருமுறை கூட கோப்பையை வென்றதே கிடையாது.

அதனால் அதிர்ஷ்டமில்லாதவர், இவரால் எப்போதுமே கோப்பையை வெல்ல முடியாது என்று ஒரு தரப்பினர் விராட் கோலியை கிண்டலடிப்பது வழக்கமாகும். ஆனால் உண்மையில் 19 வயதை தொடுவதற்கு முன்பாகவே 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக விராட் கோலி இந்தியாவுக்கு வென்று கொடுத்தார். அதைத் தொடர்ந்து தோனி தலைமையில் இந்தியா வென்ற 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றிய விராட் கோலி சாம்பியன் பட்டங்களை வென்றார்.

- Advertisement -

அந்த வரிசையில் தற்போது டி20 உலகக் கோப்பையையும் அவர் வென்றுள்ளார். இதன் வாயிலாக அண்டர்-19 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து வகையான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் மட்டுமே இந்த அனைத்து கோப்பைகளையும் வென்றார்.

இதையும் படிங்க: பார்படாஸ் மண்ணை கொஞ்சம் தின்றது ஏன்? இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

இது போக ஃபைனலில் வென்ற ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 16 ஆட்டநாயகன் விருதுகள் பெற்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற உலக சாதனையுடன் விராட் கோலி உலக நாயகனாக விடை பெற்றுள்ளார். 2வது இடத்தில் சூரியகுமார் யாதவ் (15) உள்ளார்.

Advertisement