இனி ஆல் ஏரியாலயும் விளையாடலாம் ! தமிழக வீரர் அஷ்வினுக்கு பச்சை கொடி காட்டிய கேப்டன் கோலி

Ashwin
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இத்தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என இந்த தொடரானது சமனில் உள்ளதால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று துவங்கிய இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இதையடுத்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 17/1 என்ற நிலையில் உள்ளது.

thakur 2

- Advertisement -

நிலையில்லா அஷ்வின்:
இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, முன்னதாக இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்த காரணத்தால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

ஒருவேளை ஜடேஜாவுக்கு காயம் இல்லை என்றால் அஷ்வின் வாய்ப்பு சந்தேகம் என்று கூறினால் மிகையாகாது, 400 டெஸ்ட் விக்கெட்டுகளும் மேல் எடுத்துள்ள போதிலும் 4 சதங்கள் அடித்துள்ள போதிலும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினுக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிலையான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

Ashwin

தரமான அஷ்வின்:
இதற்கு காரணம் இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு அஷ்வின் சரிப்பட்டு வரமாட்டார் என இந்திய அணி நிர்வாகம் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோர் கருதுகிறார்கள், இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உலகமே அஸ்வின் விளையாட வேண்டும் என கூறிய வேளையில் விராட் கோலி ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

- Advertisement -

இத்தனைக்கும் அதே டெஸ்ட் தொடருக்கு முன்பாக அதே இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திண்டாடிய வேளையில் 2 இன்னிங்ஸ்களிலும் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை அஷ்வின் தான் எடுத்தார், அத்துடன் கடந்த ஜனவரி 2021இல் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அப்போதைய நம்பர் ஒன் டெஸ்ட் பேட்டராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்த அஷ்வின் தன்னை தரமானவர் என நிரூபித்தவர்.

Ashwin

மீண்டும் நிரூபணம்:
அந்த வேளையில் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் இந்தியா தடுமாறிய வேளையில் வெறும் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 46 ரன்கள் குவித்து மீண்டும் தனது தேர்வை அஷ்வின் நிரூபித்துள்ளார். விராட் கோலி அணியில் இல்லாத அந்த போட்டியில் அவர் மட்டும் 46 ரன்களை எடுக்காமல் இருந்திருந்தால் இந்தியா 202 ரன்களை தொட்டிருக்காது.

- Advertisement -

பச்சை கொடி:
இந்நிலையில் இனி எந்த வகையான சூழ்நிலையிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட தகுதியானவர் என விராட் கோலி கூறியுள்ளார், இதுபற்றி 3வது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் அவர் அளித்த பேட்டியில், “இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா எவ்வாறு விளையாடி இந்திய அணிக்காக பங்காற்றி வருகிறார் என்பது அனைவருக்கும் புரியும், அவரது இடத்தில் அவரின் வேலையை அஷ்வின் கச்சிதமாக செய்து வருகிறார், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து வெளிநாடுகளில் பந்து வீசும்போது தனது விளையாட்டை முன்னேற்றியுள்ளார்”

Ashwin

“கடந்த டெஸ்டில் அவர் பேட்டிங் செய்து பந்துவீசி அணிக்கு பங்காற்றிய விதம் மிகவும் அபாரமானது, இதுபோன்ற 2 தரமான வீரர்கள் உங்களிடம் இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை துரதிர்ஷ்டவசமாக ஜடேஜா காயம் அடைந்து விட்டார் ஆனால் அவரின் இடத்தில் அஷ்வின் மிக சிறப்பாக செயல்பட்டார், தற்போது அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்திய அணியில் ஒரு சுழல்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக விளையாட தகுதியுடையவர் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”என கூறினார்.

கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின் தற்போது வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளின்போது பேட்டிங்கிலும் கணிசமாக ரன்கள் குவித்து வருவதால் இனி வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு விளையாட தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என விராட் கோலி பச்சை கொடி காட்டியுள்ளார், இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement