
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கும் பெங்களூரு தலைமையில் முதல் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 505 ரன்கள் விளாசி அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியுடன் பங்காற்றி வருகிறார்.
முன்னதாக 2013 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி 2016இல் 973 ரன்கள் விளாசி ஆர்சிபி’யை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் மற்ற வீரர்களின் சொதப்பலால் ஆர்சிபி கோப்பையை வெல்லத் தவறியது. அதற்கிடையே இந்தியாவுக்காகவும் விராட் கோலி ஐசிசி கோப்பையை வெல்லத் தவறினார். அதனால் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை ஆர்சிபி, இந்தியா எந்த கோப்பையும் வெல்லாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதனால் 2021இல் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி ஆர்சிபி கேப்டன்ஷிப் பதவியையும் துறந்தார். இந்நிலையில் அந்தக் காலகட்டங்களில் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்ததால் ஒவ்வொரு போட்டியிலும் அசத்த வேண்டும் என்ற வேதனையுடன் 24 மணி நேரம் செயல்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார். அதனாலேயே இந்தியா, ஆர்சிபி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து தோற்றாலும் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மற்ற அணிக்கு சென்று விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும் என்று என்னிடம் சொன்னார்கள். என்னுடைய கேரியரின் உச்சகட்ட சமயத்தில் வேறு அணிக்கு சென்று விளையாட எனக்கும் வாய்ப்புகள் இருந்தது”
“2016 – 2019 காலங்களில் அந்தப் பரிந்துரைகள் ஏராளமாக வந்தன. ஒரு கட்டத்தில் அது எனக்கு மிகவும் கடினமானது. ஏனெனில் எனது கேரியரில் நிறைய நடந்தது. இந்தியாவுக்காக 7 – 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூருவை 9 வருடங்கள் தலைமைத் தாங்கினேன். பேட்டிங் ரீதியாக என் மீது ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. அதனால் 24 மணி நேரமும் என்னை நான் அம்பலப்படுத்தப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்”
“அப்போது எந்த மதிப்பீடும் இல்லாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பியதால் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுத்தேன். ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து விளையாடலாமா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இருப்பினும் இந்தியாவுக்காக எனது கேரியரில் நிறைய வென்றுள்ள நான் ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்”
இதையும் படிங்க: கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில்.. 2025 ஃபிராடு ஐபிஎல் சொதப்பல் அணியை வெளியிட்ட ஐஸ்லாந்து
“அதனால் பெங்களூருவை விட்டு வெளியேறி புதிய அணியில் சாதிக்க வேண்டுமா? என்ற முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது போன்ற சூழ்நிலையில் வேறு அணிகளை விட இத்தனை வருடங்களாக பெங்களூருவுக்கு விளையாடியதால் ரசிகர்களிடம் ஏற்பட்ட உறவு முக்கியம் என்று நினைத்தேன். அதனால் வெற்றி, தோல்வி பரவாயில்லை. இதுவே என்னுடைய வீடு” என்று கூறினார்.