WTC Final : கிங், பிரின்ஸ் இதெல்லாம் ரசிகர்கள் கொடுத்த பேரு, ஆனா என்னோட கடமை அது தான் – கில் பற்றி விராட் கோலி பேட்டி

Shubman Gill Virat Kohli
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியல் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. அதில் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

Kohli 1

- Advertisement -

மேலும் சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த ஊரிலேயே அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்த தெம்புடன் களமிறங்கும் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் முதுகெலுமாக கருதப்படும் விராட் கோலியும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் சுப்மன் கில்லும் அசத்த வேண்டியது அவசியமாகிறது. அதில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்ததால் கடந்த ஃபைனலில் தடுமாறினார்.

சீனியரின் கடைமை:
ஆனால் கடந்த ஆசிய கோப்பையில் சதமடித்த அவர் கடந்த 8 மாதங்களுக்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்த சதங்களை அடித்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்றது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ள சுப்மன் கில் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அதனால் சச்சினுக்கு பின் அசத்தும் விராட் கோலியை கிங் என்றும் வருங்காலமாக கருதப்படும் சுப்மன் கில்லை பிரின்ஸ் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Gill and Kohli

இந்நிலையில் கிங், பிரின்ஸ் என்ற பெயர்கள் எல்லாம் ரசிகர்கள் அழைப்பது என தெரிவிக்கும் விராட் கோலி ஒரு சீனியராக திறமை வாய்ந்த சுப்மன் கில்லுக்கு தேவையான யுக்திகளை கற்றுக் கொடுப்பதே தம்முடைய கடமை என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கில் இந்த விளையாட்டை பற்றி என்னிடம் நிறைய பேசுவார். இந்த வயதிலேயே சிறப்பான திறமை கொண்டுள்ள அவர் கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார். மேலும் அழுத்தமான சூழ்நிலையில் பொறுமையாக இருந்து அசத்தலாக செயல்படும் திறமையும் அவரிடம் இருக்கிறது”

- Advertisement -

“எங்களுக்குள் நல்ல புரிதலும் மரியாதையும் இருக்கின்றது. நான் அவருடைய திறமையை புரிந்துகொண்டு அவர் மேலும் வளர்வதற்கு உதவி செய்ய ஆவலுடன் இருக்கிறேன். அப்போது தான் அவர் நீண்ட காலமாக இந்தியா பயனடையும் வகையில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் கிங் மற்றும் பிரண்ட்ஸ் இது போன்ற பெயர்கள் எல்லாம் ரசிகர்கள் மற்றும் போட்டியை பார்ப்பவர்கள் கொடுப்பதாகும். ஆனால் ஒரு சீனியர் வீரராக அவரைப் போன்ற இளம் வீரர் முன்னேறுவதற்கு எனது கேரியரில் கற்ற பாடங்களை வைத்து உதவ வேண்டியது கடமை என்று நினைக்கிறேன்”

Virat-Kohli

“அவரைப் போல் ஒரு பையன் கற்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் வரை நன்றாக இருப்பார். ஏனெனில் அவர் இதை எப்படி மிகவும் அழுத்தமான சமயங்களில் தொடர்ந்து செய்து நீண்ட காலம் சிறப்பாக விளையாடலாம் என்பதை கற்றுக் கொள்ள விரும்புகிறார். இப்போதைக்கு அபாரமாக விளையாடும் அவர் இந்த டெஸ்ட் போட்டியிலும் அதை தொடர்வதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : ஆஸியை வீழ்த்தும் திறமை இருக்கு, அதை மட்டும் சரியா செஞ்சுட்டா கப் இந்தியாவுக்கு தான் – நாசர் ஹுசைன் கருத்து

முன்னதாக ஐபிஎல் தொடரில் தம்முடைய பெங்களூரு அணியை சதமடித்து தோற்கடித்து வெளியே அனுப்பிய போதும் விராட் கோலி அவரை மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement