டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் 27000+ ரன்களை அடித்துள்ளார். மேலும் 81 சதங்கள் அடித்துள்ள அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி, 2024 டி20 உலகக் கோப்பை 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.
முன்னதாக 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக அறிமுகமான விராட் கோலி ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாகவே விளையாடினார். அப்போது அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவருக்கு போதுமான வாய்ப்புகளையும் ஆதரவுகளையும் வழங்கினார். அதைப் பயன்படுத்தி இன்று விராட் கோலி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார் என்றே சொல்லலாம்.
தோனி – கேரி ஆதரவு:
இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீங்கள் 3வது பேட்டிங் இடத்தில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறீர்கள் என்பதை ஆரம்பத்திலேயே தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தம்மிடம் தெளிவாக சொன்னதாக விராட் கோலி கூறியுள்ளார். அதுவே தாம் பேட்டிங்கில் இந்தளவுக்கு வளர உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கோலி பேசியது பின்வருமாறு.
“எனது திறமைகளில் நான் மிகவும் நிதர்சனமாக இருந்தேன். ஏனெனில் என்னைச் சுற்றி நிறைய வீரர்கள் விளையாடினர். அவர்களுடைய ஆட்டத்துக்கு நிகராக எனது ஆட்டம் இருப்பதாக நான் உணரவில்லை. அதே சமயம் என்னால் அசத்த முடியும் என்ற உறுதி மட்டும் இருந்தது. ஒருவேளை அணியின் வெற்றிக்காக பங்காற்ற விரும்பினால் அதற்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும்”
கடவுள் ஆசிர்வாதம்:
“அந்த எண்ணமே இந்தியாவுக்காக விளையாடும் ஆரம்பகட்ட வாய்ப்புகளை எனக்கு பெற்றுக் கொடுத்தது. அப்போது கேரி மற்றும் எம்எஸ் ஆகியோர் நாங்கள் உன்னை 3வது இடத்தில் விளையாட ஆதரவளிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொன்னார்கள். அதைத்தான் நீங்கள் அணிக்காக செய்ய வேண்டும். களத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் எனர்ஜி, அர்ப்பணிப்பு போன்றவை தான் எங்களுக்கு பெரிய மதிப்பு என்று அவர்கள் சொன்னார்கள்”
இதையும் படிங்க: தோனி இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆகப்போறது உறுதி.. அதுக்காகத்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்குது – விவரம் இதோ
“அந்தக் காலகட்டங்களில் நான் ஒரு மேட்ச் வின்னராக பார்க்கப்படவில்லை. இருப்பினும் நான் சண்டை செய்யப் போகிறேன். எதையும் விடப்போவதில்லை என்ற உறுதி எனக்குள் இருந்தது. அவர்களுடைய ஆதரவும் கடவுள் ஆசிர்வாதமும் என்னுடைய ஆட்டம், டெக்னிக் போன்ற அனைத்தையும் முன்னேற்ற உதவியது. நான் டெக்னிக்கல் அளவில் இயற்கையாக பரிசளிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கிடையாது என்று சொல்ல கூச்சப்பட்டதில்லை. அதே சமயம் சிறந்த வீரராகி அணியின் நிறைய வெற்றியில் பங்காற்றுவதற்காக முன்னேறும் பசியுடன் இருந்தேன்” என்று கூறினார்.



