இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா மோசமான உலக சாதனை படைத்தது.
ஆனால் அதற்கும் சேர்த்து பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இந்தியா சாதனை படைத்தது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்தது.
விராட் கோலி பாராட்டு:
அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் 269, 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய புதிய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல பந்து வீச்சு துறையில் முகமது சிராஜ் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பும்ராவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் சரித்திரம் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்நிலையில் இந்திய அணி பயமின்றி விளையாடியதே இங்கிலாந்தை தோற்கடித்து வரலாற்று வெற்றியைப் பெற உதவியதாக விராட் கோலி பாராட்டியுள்ளார். அத்துடன் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த ஃபிளாட்டான பர்மிங்காம் பிட்ச்சில் அபாரமாக பவுலிங் செய்த சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் 20இல் 17 விக்கெட்டுகளை எடுத்ததே இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
ஃபிளாட் பிட்ச்சில் அட்டகாச பாவுலிங்:
“எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு சிறப்பான வெற்றி. பயமின்றி விளையாடிய அவர்கள் இங்கிலாந்தை சுவற்றில் தள்ளினார்கள். சுப்மன் கில் புத்திசாலித்தனமாக இந்திய அணியை வழி நடத்தி பேட்டிங்கிலும் அசத்தினார். அனைத்து வீரர்களிடமும் இருந்து தாக்கம் மிகுந்த செயல்பாடுகள் வெளிவந்தன. இது போன்ற பிட்ச்சில் சிராஜ் மற்றும் ஆகாஷ் பவுலிங் செய்த விதத்திற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இவர் தான் இந்தியாவின் புதிய ஷமி.. கில் ஏன் 50 வெச்சுருக்கலன்னு ஆச்சர்யப்படுவீங்க.. கங்குலி பாராட்டு
இதைத் தொடர்ந்து 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் பும்ரா மீண்டும் விளையாட உள்ளது இந்திய அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. எனவே அந்தப் போட்டியிலும் வென்று முன்னிலைப் பெற இந்திய அணி பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.



