இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியிடம் 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு வெற்றியுடன் வாஷ் அவுட்டாகும் அவலத்திலிருந்து தப்பியது. அதன்படி இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே தவான் விக்கெட்டை இழந்தாலும் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி ஆகியோரது மிகவும் பிரம்மாண்டமான பாட்னர்ஷிப் காரணமாக அதிரடியாக ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிசன் 131 பந்துகளில் 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 210 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். அதேபோல 91 பந்துகளை சந்தித்த விராத் கோலியும் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 113 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் மீதமிருந்த ஓவர்களிலும் இந்திய அணி வீரர்கள் அப்படியே ரன்குவிப்பை எடுத்துச் செல்ல இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் குவித்தது. பின்னர் 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய வங்கதேச அணியானது 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தியதால் அவரது இந்த ஆட்டம் குறித்தே பலரும் பேசிவரும் வேளையில் விராட் கோலி சத்தமின்றி இந்த போட்டியில் தனது 72-வது சர்வதேச சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு சதம் அடித்த விராட் கோலி அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது தான் சதம் அடித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோலி அடித்த சதமானது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஒன்று என்று ரசிகர்கள் அவருக்கு இருந்த அதிர்ஷ்டத்தை சுட்டிக்காட்டி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் : விராட் கோலி இன்றைய போட்டியில் ஒரு ரன்னில் இருக்கும் போது மெஹதி ஹாசன் பந்துவீச்சில் கைக்கு கொடுத்த எளிய கேட்சை அந்த அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தவற விட்டார். ஒரு ரன்னில் கேட்சை தவறவிட்ட போதே விராட் கோலிக்கு இன்று செஞ்சுரி என்று எழுதப்பட்டு விட்டதாகவும் அவர் நிச்சயம் இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று கடவுளே நினைத்து விட்டார் என்றும் ரசிகர்கள் அவரது இந்த அதிர்ஷ்டத்தை கருத்துக்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : IND vs BAN : 3வது போட்டியில் ப்ரம்மாண்டம் காட்டிய இந்தியா – வங்கதேசத்தை அடித்து துவைத்து 19 வருட சாதனை வெற்றி
இப்படி 1 ரன்னில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 44 ஆவது சதமாக மாற்றினார். ஒருவேளை விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அப்போதே வெளியேறி இருந்தால் இந்திய அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.