இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி தற்சமயத்தில் சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் ஆரம்பக் காலங்களில் பெரும்பாலானவர்களை போலவே தடுமாற்றமாக விளையாடினார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2009 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஷாஹித் அப்ரிடியிடம் விக்கெட்டை இழந்ததால் தம்முடைய கேரியர் முடிந்து விடும் என்று பயந்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 303 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் அதிரடியாக 57 (46), ராகுல் டிராவிட் நங்கூரமாக விளையாடி 76 (103), ரெய்னா 46 (41) ரன்கள் எடுத்தனர். ஆனால் சச்சின் 8, விராட் கோலி 16, தோனி 3, யூசுப் 5 என மற்றவர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
பொன்னான வாய்ப்பில்:
அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்த அப்போட்டி பற்றி விராட் கோலி நினைவு கூர்ந்தது பின்வருமாறு. “இலங்கையில் எனது அறிமுகத் தொடரில் விளையாடிய நான் பின்னர் விடுவிக்கப்பட்டேன். ஏனெனில் சச்சின் பாஜி காயத்திலிருந்து வந்தார். அவரது இடத்தில் தான் நான் விளையாடினேன். வேறு இடமில்லாததால் எனது மறுவாய்ப்புக்காக காத்திருந்தேன்”
“அந்த சூழ்நிலையில் 2009 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் யுவ்ராஜ் பாஜி காயத்தை சந்தித்தார். அதனால் உங்களுடைய பெட்டிப்படுக்கை, பாஸ்போர்ட் ஆகியவற்றை அனைத்து நேரமும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தினர் என்னிடம் சொன்னார்கள். அப்போது பெங்களூருவில் இருந்த என்னை திடீரென அவர்கள் தென்னாப்பிரிக்கா பறந்து வர சொன்னார்கள்”
சொதப்பியது பற்றி கோலி:
“அங்கே சென்ற நான் அடுத்த 3வது நாளில் எனது கேரியரில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினேன். ஆனால் அப்போட்டியில் ஷாஹித் அப்ரிடிக்கு எதிராக நேராக சிக்ஸர் அடிக்க முயற்சித்த நான் அவுட்டானேன். கடைசியில் நாங்கள் தோற்றோம். எனது விக்கெட் முக்கிய தருணமாக இருந்ததால் அந்த இன்னிங்ஸ் முழுவதும் என்னுடைய இதயம் வேகமாக துடித்தது”
இதையும் படிங்க: தோனி இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆகப்போறது உறுதி.. அதுக்காகத்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்குது – விவரம் இதோ
“அந்த அனைத்தும் 4 நாட்களுக்குள் நடந்து முடிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அன்று பெரிய தோல்வியை சந்தித்ததால் என்னால் தூங்க முடியவில்லை. விடியற்காலை 5 மணி வரை சுவரைப் பார்த்துக்கொண்டு விழித்திருப்பேன். ஏனெனில் ஒன்றரை வருடம் கழித்து எனக்கு கிடைத்த வாய்ப்பில் சொதப்பி விட்டேன். அவ்வளவு தான் முடிந்தது என்று நினைத்தேன். அது போல என்னை சந்தேகப்பட்ட நிறைய தருணங்கள் இருந்தது. இருப்பினும் அது போன்ற தருணங்களை வைத்து தான் நாளடைவில் எனக்கு முன்பிருந்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி விளையாடத் துவங்கினேன்” என்று கூறினார்.



