இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் என 46 ரன்கள் சராசரியுடன் 9230 ரன்களை குவித்துள்ளார். கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது கூட ஒரு சதம் அடித்து அசத்தியிருந்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். எனவே இன்னும் சில ஆண்டுகள் அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி :
இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தற்போது தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அவரது சமூகவலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த பின்னர் தற்போது ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி அது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது : நான் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கான தொப்பியை அணிந்து விளையாட துவங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த பயணம் இவ்வளவு தூரம் வரும் என்று நான் நினைத்து பார்த்தது கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட் உண்மையிலேயே என்னை நெறிப்படுத்தியது. பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்தது. என்னை பல வகையிலும் சோதித்தது அதன் மூலம் கற்றுக் கொண்ட விடயங்களை நான் எனது வாழ்க்கைக்கும் கொண்டு வந்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதான முடிவு கிடையாது. ஆனாலும் இதுதான் தற்போதைக்கு சரியான ஒன்று என நினைக்கிறேன்.
நான் முழு மனதுடனும், பெருமையுடன் இந்த வடிவத்தில் இருந்து வெளியேறுகிறேன். இத்தனை ஆண்டுகள் இக்களத்தில் நான் இணைந்து விளையாடிய வீரர்களுக்கும், என்னுடன் பிணைப்பில் இருந்த ஒவ்வொரு நபருக்கும், என்னை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன் என விராட் கோலி உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் ஐ.பி.எல் தொடர் துவங்கினாலும் மிட்சல் ஸ்டார்க் விளையாட மாட்டாராம்.. காரணம் என்ன? – விவரம் இதோ
அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்திருந்தாலும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலககோப்பை தொடர் வரை அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று நம்பலாம்.



