இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த பல தொடர்களாகவே பெரிய அளவில் ரன் குவிக்காமல் தடுமாறி வருவது அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதுமட்டும் இன்றி தனது கரியரின் கடைசி கட்ட பயணத்திலும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த பல தொடர்களாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
பயிற்சியின் போது விராட் கோலிக்கு ஏற்பட்ட பாதிப்பு :
ஏனெனில் அனுபவ வீரராக இருந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதனால் விராட் கோலி இளம் வீரர்களுக்கு இணையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலும் வங்கதேச அணிக்கு எதிராக 22 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்த விராட் கோலி இந்த தொடரில் எவ்வாறு செயல்படுகிறாரோ அதனை பொறுத்துதான் அவரது எதிர்காலம் அமையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் அவர் ஆட்டமிழந்து இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பார்மிற்கு வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
ஆனால் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலிக்கு பயிற்சியின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மற்ற இந்திய வீரர்களுக்கு முன்கூட்டியே மைதானத்திற்கு வந்த விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களை அழைத்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
3 மணி நேரங்களுக்கு முன்னதாகவே வந்து பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் திடீரென மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் தனது இடது கணுக்கால் பகுதியில் ஐஸ் பேக் ஒத்தரம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். மேலும் அதே கருவியுடன் அவர் நடந்தும் வந்தார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணி இந்த விடயத்தில் பாகிஸ்தான் அணியை விட வெயிட் தான் – ஷாகித் அப்ரிடி கருத்து
ஏனெனில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது கணுக்கால் காயம் காரணமாக அந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி இதே பாதிப்பை தான் சந்தித்தார் என்பதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரால் விளையாட முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மோசமான பார்மில் சிக்கித் தவிர்க்கும் அவருக்கு தற்போது கணுக்கால் காயமும் பாதிப்பை ஏற்படுத்தினால் அது அவருக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



