எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் இருநாட்டு ரசிகர்களை தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த போட்டி ஒரு திருவிழாவாகத்தான் அமையும். அந்த வகையில் தான் இதுவரை கடந்த காலங்களில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் அமைந்துள்ளன. இப்படி நடைபெறும் போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியே பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இதில் ஒரே ஒருமுறை மட்டும் 2021-ல் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. அதனை தவிர்த்து நடைபெற்ற அனைத்து உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானம் நிரம்பி வழியும்.
குறிப்பாக 2022-ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் நேரடியாக 90 ஆயிரம் ரசிகர்கள் அந்த போட்டியை கண்டு களித்தனர். அதேபோன்று 2023-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் 50 ஓவர் உலககோப்பை போட்டி நடைபெற்ற போது ஒரு லட்சம் பேர் மைதானத்திற்கு நேரில் வந்து அரங்கை அதிர செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணி மோத இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியும் தோல்வியும் விராட் கோலி கையில்தான் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் இதுவரை டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி நான்கு முறை அரை சதத்தை பதிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் ஆட்டமிழகாமல் இருந்த அந்த நான்கு போட்டியிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு முறை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டம் இழந்த போது இந்திய அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இதையும் படிங்க : நீங்க நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தா.. பாகிஸ்தானுக்கு எதிரா இதை செய்ங்க.. சூரியகுமாருக்கு கம்ரான் அக்மல் சவால்
அதன் காரணமாக இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் இருந்தால் நிச்சயம் இந்திய அணியே வெற்றி பெறும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 உலககோப்பை டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 4 அரை சதங்களுடன் 308 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 2022-ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் 82 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.