என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லா தெரியும். இதுல சொல்றதுக்கு எதும் இல்ல – கோலி குறித்து பேசிய கங்குலி

Ganguly-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருட்டி பேட்டிங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது ஜூலை 14-ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி லேசான காயத்தால் பங்கேற்கவில்லை என்பதால் 2-வது போட்டியில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Kohli-2

- Advertisement -

அதைவிட தினம்தோறும் சவுக்கடிகளாக வரும் விமர்சனங்களுக்கு பதிலடியாக எப்போது சதமடிப்பார் என்ற ஏக்கமும் அவரின் ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து கடந்த 3 வருடங்களாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கிறார். இத்தனைக்கும் கடந்த 2008ல் அறிமுகமாகி தனது அபார பேட்டிங் திறமையால் கடந்த 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் சச்சினை போல ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள அவர் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

விமர்சன அம்புகள்:
அந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்த அளவுக்கு முயற்சிக்கும் அவர் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்துவந்த கேப்டன்ஷிப் பொறுப்பு தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் கடந்த ஜனவரியில் இருந்து படிப்படியாக விலகி சாதாரணமாக பேட்ஸ்மேனாக விளையாட துவங்கியுள்ளார். அதனால் சுதந்திரப் பறவையாக அழுத்தமின்றி விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட மோசமாக பேட்டிங் செய்கிறார். அதன் காரணமாக சில மாதங்கள் பிரேக் எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டதையும் பின்பற்றாத அவர் தொடர்ச்சியாக சுமாராகவே விளையாடி வருகிறார்.

kohli

அதனால் பொறுமை இழந்த ஜாம்பவான் கபில்தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் எத்தனை நாட்கள் பெரிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு இந்திய அணியில் விளையாடுவீர்கள் என்ற விமர்சனங்களை தினந்தோறும் அம்பாக எய்து வருகிறார்கள். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் 70 சதங்களுடன் உலகின் 3-வது மகத்தான பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளது அவ்வளவு சிறிய விஷயமல்ல என்று தெரிவிக்கும் சில முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

கங்குலி ஆதரவு:
இந்நிலையில் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்துள்ள விராட் கோலியின் திறமையை அவரின் புள்ளிவிவரங்கள் பேசுவதாக தெரிவிக்கும் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என நம்பிக்கையும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் புள்ளி விவரங்களைப் பாருங்கள். அது ஒருவரிடம் திறமையும் தகுதியும் இல்லாமல் வந்திருக்காது. ஆம் அவர் தற்போது மோசமான தருணத்தில் தவிக்கிறார் என்பது அவருக்கும் தெரியும். இருப்பினும் மிகச்சிறந்த வீரரான அவருக்கும் நாம் தற்போது சிறப்பாக செயல்படவில்லை என்பது தெரியும். எனவே விரைவில் அவர் பார்முக்கு திரும்புவதை பார்க்க விரும்புகிறேன்”

Ganguly 1

“ஆனால் அதற்கான வழியை அவர் விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும். கடந்த 12 – 13 வருடங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட அவரால் மட்டுமே அந்த வழியை கண்டுபிடிக்க முடியும். இதுபோன்ற மோசமான தருணங்கள் விளையாட்டில் அனைவருக்கும் ஏற்படும். சச்சினுக்கும் ட்ராவிட்டுக்கும் எனக்கும் ஏற்பட்ட அந்த மோசமான தருணம் விராட் கோலிக்கும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வருங்கால வீரர்களுக்கும் இது கண்டிப்பாக ஏற்படும். இவை அனைத்துமே விளையாட்டின் ஒரு பகுதியாகும். இருப்பினும் ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் அதை கவனித்து விழிப்புணர்வைப் பெற்று அதிலிருந்து மீண்டெழுந்து சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்திய வீரர் பும்ராவை மிஞ்சி மிகச்சிறந்த பவுலராக இந்த பாகிஸ்தான் பவுலர் வருவார் – சல்மான் பட் கருத்து

கடந்த டிசம்பர் மாதம் விராட் கோலியை அதிரடியாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியதற்கு சவுரவ் கங்குலி முக்கிய காரணம் என்று அவரின் ரசிகர்கள் இன்னும் காட்டத்துடன் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த மோசமான தருணத்தில் விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி ஆதரவு கொடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Advertisement