இந்திய அணியின் வீரர் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தடுமாறுவார்கள். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளதே விராட் கோலியின் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி நிறைய வெற்றிகளில் பங்காற்றி இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் விராட் கோலி கிரிப்டோன் போன்ற வேற்று கிரகத்திலிருந்து வந்தவரைப் போல் சாத்தியத்திற்கும் மிகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் பாராட்டியுள்ளார்.
தரமான விராட் கோலி:
அத்துடன் இப்போதெல்லாம் விராட் கோலியிடம் வம்பிழுத்தால் அடித்து நொறுக்குவார் என்ற எதிரணிகளே சொல்வதை தாம் கேட்பதாகவும் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி வித்தியாசமான கிரகத்திலிருந்து வந்தவர். சில நேரங்களில் அவரிடம் நான் “உங்களிடம் கிரிப்டோன் அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்பேன். அதற்கு சிரிப்பால் அவர் பதில் கொடுப்பார்”
“அதையும் தாண்டி அவரிடம் நீங்கள் கிரிப்டோனில் இருந்து வந்தீர்களா? நீங்கள் கண்டிப்பாக பூமியிலிருந்து வந்திருக்க முடியாது என்று சொல்வேன். இப்படி விளையாடுவதற்கு அவருக்கு எனர்ஜி எங்கே இருந்து வருகிறது? அது நம்ப முடியாது. அவர் உத்வேகமாக இருக்கிறார். அவர் நவீன கிரிக்கெட்டின் லெஜெண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”
அஞ்சும் எதிரணிகள்:
“கடந்த ஐபிஎல் தொடரில் அவர் எப்படி பேட்டிங், ஃபீல்டிங் செய்து களத்தில் தமக்கு தாமே எனர்ஜியுடன் முழு ஆர்வத்துடன் விளையாடினார் என்பதை பார்த்தோம். அவர் தமக்குள் இரும்பை உருவாக்கியுள்ளதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. அவர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நன்றாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார். குறிப்பாக அவரைப் பற்றி யாராவது சந்தேகப்பட்டு பேசும் போது அல்லது வம்பிழுத்து அல்லது ஏதாவது சொன்னால் கண்டிப்பாக விராட் கோலி மிகச்சிறப்பாக செயல்படுவார்”
இதையும் படிங்க: 4279 நாட்கள்.. மிரட்டும் இந்தியா.. பாகிஸ்தான் ஏணி வெச்சாலும் எட்ட முடியாது.. ஆச்சர்ய புள்ளிவிவரம்
“இப்போதெல்லாம் எதிரணிகளிடம் உட்கார்ந்து நீங்கள் பேசும் போது “விராட் கோலி அடிக்கட்டும் விட்டு விடுங்கள். அவரிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள் அல்லது ஊசியை ஏற்றாதீர்கள். இல்லையேல் அவர் நம்மை போட்டியில் கம்பேக் கொடுக்க முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கி விடுவார்” என்ற ஒரு விஷயத்தை சொல்கின்றனர்” எனக் கூறினார்.



