எப்படியாவது 71வது சதம் அடிக்கணும் கடவுளே – வேண்டுதலில் களமிறங்கிய விராட் கோலி ரசிகர்கள், செய்ததை பாருங்க

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையில் ஜாம்பவான் சச்சினை போல் அவரின் இடத்தில் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களை அடித்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதுவும் 3 வெவ்வேறு வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை வைத்துள்ள காரணத்தாலேயே அவரை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

33 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அவர் 2019இல் முதல் முறையாக வீழ்ச்சியை சந்தித்தார். பொதுவாக பகலும் இரவும் இன்பமும் துன்பமும் என்ற வகையில் உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருந்த அவர் 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவிப்பதால் பார்ம் அவுட் என நினைக்கும் அனைவரும் எப்போது பார்முக்கு திரும்புவார் என்று கடந்த சில வருடங்களாக பேசி வருகிறார்கள்.

- Advertisement -

உச்சகட்ட விமர்சனம்:
இருப்பினும் ஆரம்ப காலகட்டத்தில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று ஒரு தரத்தை ஏற்படுத்தியுள்ளதே தற்போது அவருக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த சோதனை காலத்திலும் அவ்வப்போது 40, 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவர் முடிந்தளவு இந்தியாவின் வெற்றிக்காக பாடுபடுகிறார். ஆனாலும் சதமடிக்கவில்லை என்பதற்காக அவர் பார்ம் அவுட்டாகி விட்டார் என்றே அனைவரும் விமர்சிக்கிறார்கள். அதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்த அவர் சாதாரண வீரராக அழுத்தமின்றி விளையாட துவங்கியதால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்படுவதால் பொறுமையிழந்த அனைவரும் இப்போது அவரை அணியிலிருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக பெரிய பெயரை வைத்துக்கொண்டு பெரிய ரன்களை அடிக்காமல் எத்தனை நாட்கள் விளையாடுவீர்கள் என்று ஜாம்பவான் கபில்தேவ் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். அவரைப்போலவே உலகம் முழுவதிலும் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அவரை விமர்சிப்பதால் தற்போது விராட் கோலி உச்சகட்ட அழுத்தத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஆதரவு கொடுங்க:
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடிப்பது சிறிய விஷயமல்ல என்று தெரிவிக்கும் சிலர் அவருக்கு ஆதரவையும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அவரைப்போன்ற வீரர் தங்களது நாட்டுக்காக விளையாடியிருந்தால் உங்களைப் போல் விமர்சிக்க மாட்டோம் என்று தெரிவிக்கும் கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டவர்கள் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதேப்போல் பரம எதிரியான பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இந்த மோசமான தருணத்தில் விராட் கோலிக்கு ஆதரவுதான் தேவையே தவிர விமர்சனங்களை கொடுக்க வேண்டாம் என்ற வகையில் இதுவும் கடந்து போகும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மோசமான காலகட்டத்திலும் அவ்வப்போது சிறப்பான ரன்களை குவித்து வரும் விராட் கோலியின் புள்ளிவிவரங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டும் அவரின் ரசிகர்கள் இதே காலகட்டத்தில் இதர நட்சத்திர வீரர்கள் அவரளவுக்கு கூட செயல்படாததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் இந்த தேவையற்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எப்படியாவது தங்களின் ஹீரோவான விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்றும் அவர் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் ரசிகர்கள் கடவுளைப் பிரார்த்திப்பதையும் பார்க்க முடிகிறது.

அன்னதானம்:
இந்நிலையில் 70 சதங்களை அடித்துள்ள விராட் கோலி 71-ஆவது சதத்தை எப்படியாவது விரைவில் அடிக்க வேண்டும் என்று வேண்டுதலுடன் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் தாகம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். உலகிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸி ஆகிய கால்பந்து ஜாம்பவான்களுக்குப் பின் அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்ட விளையாட்டு வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சினிமாவிலும் அரசியலிலும் தங்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரத்தின் பிறந்தநாளில் அல்லது குணமடைய வேண்டுமென்று இதுபோன்ற வேண்டுதல்களை ரசிகர்கள் செய்வதைப் பார்த்துள்ளோம். அந்த வகையில் கிரிக்கெட் வீரரான விராட் கோலி அடுத்த சதமடிக்க வேண்டுமென்ற வேண்டுதலுடன் அவரின் தீவிர ரசிகர் ஒருவர் அன்னதானம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement