கர்மா யார விட்டுச்சு சார் – பிசிசிஐ’யிலிருந்து வெளியேறும் கங்குலி, கொண்டாடும் விராட் கோலி ரசிகர்கள் – காரணம் என்ன

Ganguly
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி விலக உள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்டப் புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்று இந்தியாவை வெற்றி நடைபோடும் அணியாக மாற்றிய அவர் கடந்த 2019இல் போட்டியின்றி பிசிசிஐ தலைவராகவும் பொறுப்பேற்றதுமே உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தி கையெழுத்திட்டார். அத்துடன் அதுவரை யோசித்து வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியாவை விளையாட வைத்த அவரது முயற்சி அனைவரது பாராட்டுகளைப் பெற்றது.

அப்படி வெற்றிகரமாக செயல்படத் துவங்கிய அவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் விஷயத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். ஆம் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி உலக கோப்பையை வெல்ல முடியாத நிலையில் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கோப்பையையும் வெல்ல முடியாமல் தவித்தார். மறுபுறம் மும்பை அணிக்காக அசால்ட்டாக 5 கோப்பைகளை வென்றதால் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டனாக வேண்டும் என்ற பிசிசிஐயின் மறைமுக அழுத்தத்திற்கு மத்தியில் குவிந்த விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக விரும்பினார்.

- Advertisement -

எல்லாம் கர்மா சார்:
ஆனால் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியதால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீது பிசிசிஐ மேலும் நம்பிக்கை இழந்தது. அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்பதை காரணமாக கையிலெடுத்த பிசிசிஐ தேர்வுக் குழுவை வைத்து விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி அதிரடியாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. ஆனால் அது பற்றி ஒருசில மணி நேரங்கள் முன்பாக மட்டுமே தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தென்னாப்பிரிக்காவில் இருந்த விராட் கோலி உண்மையை போட்டுடைத்தார்.

அடுத்த சில நாட்களில் விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்றும் அவர்தான் தாமாக முன்வந்து விலகியதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த விராட் கோலி அவ்வாறு தம்மிடம் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை என்று உண்மையை மேலும் உடைத்தார். அது பற்றி கங்குலியிடம் மீண்டும் கேள்வி எழுப்பிய போது இது பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என்று கூறிவிட்டு சென்றார்.

- Advertisement -

அதனால் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்சிப் பதவி பறிபோனதில் கங்குலியின் பங்கு இருந்தது அம்பலமானது. கடந்த டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் இந்த விவகாரம் அனல் பறந்த நிலையில் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட விரும்பியும் தம்மை அதிரடியாக நீக்கியத்தால் மனமுடைந்த விராட் கோலி இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்தும் பிசிசிஐ உட்பட யாரையும் குறை சொல்லாமல் பணிச்சுமையை காரணமாக காட்டி எஞ்சியிருந்த டெஸ்ட் கேப்டன் பதவியையும் திடீரென ராஜினாமா செய்தார்.

அதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் சர்ச்சைக்கு காரணம் சௌரவ் கங்குலி தான் என்று வெளிப்படையாக விமர்சித்த அவரது ரசிகர்கள் அணித் தேர்விலும் அவரது தலையீடு இருப்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளிப்படுத்தினர். இருப்பினும் அதை மறுத்த சௌரவ் கங்குலி மொகாலியில் விராட் கோலி பங்கேற்ற 100வது டெஸ்டில் நேரடியாக சென்றும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த போதும் தொடர்ச்சியாக ஆதரவும் கொடுத்தார். அந்த நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிகாலம் முடிவடைவதால் ஐபிஎல் சேர்மன் பொறுப்பை ஏற்குமாறு பிசிசிஐ நிர்வாகிகள் சவுரவ் கங்குலிக்கு ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் அவரோ ஐசிசி தலைவர் பதவிக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டதாகவும் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்தன. அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஐபிஎல் சேர்மன் பொறுப்பும் கிடையாது, ஐசிசி தலைவர் பதவிக்கு ஆதரவும் கொடுக்க முடியாது என்ற கோட்பாட்டுட்டுடன் அவரை தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு உயர்மட்டக் குழு கூட்டத்தில் ரோஜர் பின்னியை போட்டியின்றி தேர்வு செய்ததாகவும் உறுதியான செய்திகள் வெளிவந்துள்ளன. இதை பார்க்கும் விராட் கோலி ரசிகர்கள் ஒருநாள் கேப்டனாக தொடர விரும்பிய போது நீக்கிய சவுரவ் கங்குலியை தற்போது பிசிசிஐ நீக்கியுள்ளதாகவும் “கர்மா யாரை சார் விட்டுச்சு” என்றும் சமூக வலைதளங்களில் அவரது வெளியேற்றத்தை கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement