ராஞ்சியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (16) ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் ரோஹித் சர்மா கேட்ச் விட்டதைப் பயன்படுத்தி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் அந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 3வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்த அந்த ஜோடியில் ரோஹித் அரை சதமடித்து 57 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இந்தியா அசத்தல்:
எதிர்புறம் வந்த ருதுராஜ் 8, வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் அவுட்டானார்கள். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி சதத்தை விளாசி 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் 135 (120) ரன்கள் குவித்து அவுட்டானார். டெத் ஓவர்களில் அதிரடி காட்டிய கேப்டன் ராகுல் கிளாஸ் நிறைந்த அரை சதமடித்து 60 (56) ரன்கள் குவித்தார்.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 32 (20) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 50 ஓவரில் 349/8 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், நன்ரே பர்கர், பார்ட்மேன், கோர்பின் போஸ்க் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இப்போட்டியையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 6 சதங்கள் அடித்துள்ளார்.
விராட் கோலியின் 3 உலக சாதனைகள்:
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 5 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விராட் கோலி 52 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: 352 சிக்ஸ்.. 20 முறை 100.. அப்ரிடியின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித்.. புதிய உலக சாதனை
அத்துடன் இதையும் சேர்த்து இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 59 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 59*, இந்தியாவில்
2. சச்சின் டெண்டுல்கர்: 58, இந்தியாவில்
3. ஜேக் காலிஸ்: 45, தென் ஆப்பிரிக்காவில்



