இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை தான் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ள விராட் கோலி அந்த உலக கோப்பை தொடரை நோக்கி தனது அடுத்த கட்ட பயணத்தில் மிகச் சிறப்பாக பயணித்து வருகிறார்.
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :
அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என இரண்டிலும் அசத்திய அவர் அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் வேளையில் இந்த தொடரில் அனுபவ வீரரான விராட் கோலியும் நிச்சயம் இடம்பெற்று விளையாடுவார் என்பது உறுதி.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடப்போகும் விராட் கோலி முன்னாள் இந்திய ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக 1750 ரன்கள் அடித்துள்ளார் .அவருக்கு அடுத்து விராட் கோலி 33 போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 9 அரைசதம் என 1657 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இடம் கொடுக்கலனா என்ன? நான் இதை எப்போவும் நிறுத்த மாட்டேன் – துருவ் ஜுரேல்
இதன் காரணமாக எதிர்வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மேலும் 94 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் 1751 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் எனபது குறிப்பிடத்தக்கது.



