கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிக்காக அதிரடியாக விளையாடி வருகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சரவெடியாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, கேஎல் ராகுல் 58, விராட் கோலி 47 ரன்கள் எடுத்தனர். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாகவும் இந்தியா 5 உலக சாதனைகளை படைத்தது.
இந்தியா வெல்லுமா:
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் மற்றும் சாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் நான்காவது நாள் முடிவில் 26-2 என தடுமாறி வருகிறது. ஜாகிர் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டான அந்த அணிக்கு சாதமன் இஸ்லாம் 7*, மோனிமுல் ஹைக் 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இப்போட்டியில் வழக்கத்திற்கு மாறாக 5வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (35) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்கள் குவித்த 4வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 34257
2. குமார் சங்ககாரா: 28016
3. ரிக்கி பாண்டிங்: 27483
4. விராட் கோலி: 27000*
5. மகிளா ஜெயவர்த்தனே: 25957
கிங் கோலியின் சாதனை:
அந்த 27000 ரன்களை அவர் சச்சினை விட 29 இன்னிங்ஸ் குறைவாக 594 இன்னிங்ஸில் எடுத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்கள் குவித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. விராட் கோலி: 594*
2. சச்சின் டெண்டுல்கர்: 623
3. குமார் சங்ககாரா: 648
4. ரிக்கி பாண்டிங்: 650
இதையும் படிங்க: 31 பந்தில் 50.. சேவாக்கின் 16 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. ரஹானேவையும் முந்தி தனித்துவ சாதனை
இதைத்தொடர்ந்து 5வது நாளில் வங்கதேசத்தை விரைவில் அவுட்டாக்கி பின்னர் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற இந்தியா போராட உள்ளது. சொல்லப்போனால் 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது நாளில் அதிரடியாக விளையாடி இப்போட்டியை இழுத்துக் கொண்டு வந்துள்ள இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



