அகமதாபாத் நகரில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை ஏற்கனவே முதல் 2 போட்டிகளை வென்று இந்தியா வென்றுள்ளது. அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் சுப்மன் கில் 112 ரன்கள் அடித்தார். அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 52, ஸ்ரேயாஸ் ஐயர் 78, கேஎல் ராகுல் 40 ரன்கள் அடித்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விராட் கோலி அசத்தல்:
முன்னதாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் 7 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட அவர் 52 (55) ரன்கள் அடித்து ஓரளவு ஃபார்முக்கு வந்துள்ளார். அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக அவருடைய இந்த அரை சதம் இந்திய அணிக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இந்தப் போட்டியையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி 4000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை அவர் உடைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 4000*
2. சச்சின் டெண்டுல்கர்: 3990
3. எம்எஸ் தோனி: 2999
4. ராகுல் டிராவிட்: 2993
5. சுனில் கவாஸ்கர்: 2919
ஆசிய நாயகன்:
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அணிகளுக்கு எதிராக 4000 ரன்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் உலக சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார். இதுவரை விராட் கோலி ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்துக்கு எதிராக தலா 4000 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங் தலா 4000 ரன்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா, விவ் ரிச்சர்ட்ஸ் தலா 2 அணிகளுக்கு எதிராக 4000 ரன்கள் அடித்து அதேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சச்சின், விராட் கோலியை முந்திய சுப்மன் கில் – சூப்பர் ரெக்கார்டு
இது போக ஆசியக் கண்டத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 16000 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஆசிய மண்ணில் அதிவேகமாக 16000 சர்வதேச ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்(இன்னிங்ஸ்):
1. விராட் கோலி: 340*
2. சச்சின் டெண்டுல்கர்: 353
3. குமார் சங்கக்காரா: 360



