ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதிப்போட்டி மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடிய 76 ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 61 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 3 ரவீந்திர ஜடேஜா மற்றும் தமிழக வீரர் வாரும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
கேட்ச்சில் சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஸ் இங்லீஷ் மற்றும் எலிஸ் ஆகியோர் கொடுத்த கேட்சை இந்திய வீரர் விராட் கோலி கச்சிதமாக பிடித்தார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 301 போட்டிகளில் 161 கேட்ச்கள் பிடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்கள் பிடித்ததே முந்தைய சாதனை. அதே பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனை 218 கேட்ச்கள் பிடித்து விரைவில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். இது போக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 548 போட்டிகளில் விராட் கோலி 336 கேட்ச்கள் பிடித்துள்ளார்.
ட்ராவிட் சாதனை:
அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 509 போட்டிகளில் 334 கேட்ச்கள் பிடித்ததே முந்தைய சாதனை. அதே பட்டியலில் மீண்டும் இலங்கையின் ஜெயவர்த்தனே 440 கேட்ச்களுடன் முதலிடம் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 264 ரன்ஸ்.. ஹெட்டை அடக்கியும் ஸ்மித், கேரியால் மீண்டெழுந்த ஆஸி.. 14 வருட சாதனை இலக்கை இந்தியா சாதிக்குமா?
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 364, நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 351, தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கேலிஸ் 338 கேட்ச்களுடன் அடுத்த 3 இடங்களில் இருக்கிறார்கள். விராட் கோலி 336 கேட்ச்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார். எனவே விரைவில் இன்னும் 3 கேட்ச்கள் பிடித்து ஜாக் கேலிஸை அவர் முந்துவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



