
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி மும்பையில் 20வது போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு அதிரடி காட்டிய பிலிப் சால்டை 4 ரன்னில் ட்ரெயின் போல்ட் கிளீன் போல்ட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடினார்.
அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய தேவ்தூத் படிக்கல் 2வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 37 (22) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை அடித்து அசத்தினர். அந்த வகையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 8 பவுண்டர் 2 சிக்ஸருடன் 67 (42) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இதையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி படைத்தார். அத்துடன் உலகளவில் கிறிஸ் கெயில் (14562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13610), சோயப் மாலிக் (13557), கைரன் பொல்லார்ட் (13537) ஆகியோருக்குப் பின் 13,000 டி20 ரன்கள் அடித்த 5வது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் வேகமாக 13000 ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த சோயப் மாலிக் 487 இன்னிங்ஸில் 13000 ரன்கள் அடித்திருந்தார். தற்போது விராட் கோலி 386 இன்னிங்சிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் டக் அவுட்டானார். ஆனால் மறுபுறம் களமிறங்கி இருந்த கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.
தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 64 (32) ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அவருடன் சேர்ந்து டெத் ஓவர்களில் பட்டாசாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 40* (19) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 221-5 ரன்கள் குவித்து அசத்தியது. அதனால் வான்கடே மைதானத்தில் தங்களது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் பெங்களூரு பதிவு செய்தது.
இதையும் படிங்க: நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி.. பிளேஆப் சுற்றுக்கு சி.எஸ்.கே செல்ல என்ன வழி? – விவரம் இதோ
மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மேலும் மற்ற பவுலர்கள் அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர். அவர்களை விட காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்த நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் 4 ஓவரில் வெறும் 29 ரன்கள் கொடுத்து 7.20 எக்கனாமியில் பவுலிங் செய்து அசத்தினர்.