
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கடுத்த சில நாட்களில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.
அந்தத் தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சுமாராக பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெற்றார்.
அவருக்கு நண்பனாக விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர்கள் தற்போது மீண்டும் நட்புக்கு அடையாளமாக ஒன்றாக விடை பெற்றுள்ளனர். இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலியை ஓய்வு பெற வைத்த தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கான இந்திய பேட்டிங் வரிசையில் அனுபவம் ரீதியாக பெரிய ஓட்டையைப் போட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.
மேலும் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலி, ரோஹித் சர்மாவை ஃபேர்வெல் போட்டியை நடத்தி விடையனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “தற்போது விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோஹித் சர்மா விடை பெற்றார்”
“அவர்கள் இருவருமே சரியான முறையில் விடை பெற வழியனுப்பும் போட்டியில் விளையாடத் தகுதியானவர்கள். இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட வேண்டும் என்று நான் வலுவாக நம்புகிறேன். இது ஒரு சமூக செய்தியாகவும் இருக்கும். நிறைய ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஆரவாரத்துடன் அவர்களை வழியனுப்ப வேண்டும். சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோஹித் நீண்ட நாட்களாக இந்தியாவின் கேப்டனாக இருந்தார்”
இதையும் படிங்க: இங்கிலாந்து டூருக்கு ஷர்துல் தாகூர் போகப்போறது உறுதி.. காரணம் என்ன? – விவரம் இதோ
“விராட் கோலி இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேப்டன். அந்த இருவர்களில் ஒருவர் இங்கிலாந்து தொடரில் இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளது தேர்வுக் குழுவினருக்கு ஆச்சரியமாக இருக்கும். விராட் கோலியை தேர்வுக்குழுவினர் பின்தொடர்ந்து ஓய்வு முடிவை தடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.