IND vs PAK : இதெல்லாம் சகஜம், தயவு செய்து திட்டாதீங்க – இளம் வீரருக்கு விராட் கோலி முதல் முன்னாள் வீரர்கள் வரை மெகா ஆதரவு

Arshdeep Singh Virat Kohli
- Advertisement -

ஐக்கிய நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பரம எதிரியான இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் இதே தொடரின் லீக் சுற்றில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தது. துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் தலா 28 ரன்கள் எடுக்க மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 0, தீபக் ஹூடா 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக இந்தியாவை தாங்கிப் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 60 (44) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தாலும் 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முகமது நவாஸ் அதிரடியாக 42 (20) ரன்களும் முஹம்மது ரிஸ்வான் 71 (51) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

கடுமையான விமர்சனம்:
இறுதியில் குஷ்தில் ஷா 14* (11) ரன்களும் ஆசிப் அலி 16 (8) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா பந்து வீச்சிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி பரம எதிரியிடம் தோற்று தலைகுனிந்தது. முன்னதாக இந்த போட்டியில் 18வது ஓவரில் 0 ரன்களில் இருந்த ஆசிப் அலி கொடுத்த கேட்சை அரஷ்தீப் சிங் தவற விட்டது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதிலும் எல்லை மீறிய சில ரசிகர்கள் வழக்கம் போல கெட்ட வார்த்தைகளாலும் கடும் சொற்களாலும் திட்டி தீர்க்கிறார்கள். இருப்பினும் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு போராடிய அவர் மொத்தமாக 3.5 ஓவரில் 27 ரன்களை கொடுத்து ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

பெருகும் ஆதரவு:
அதுபோக ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களும் புவனேஸ்வர் குமார் போன்ற இதர ப்வுலர்களும் சுமாராக செயல்பட்ட நிலையில் தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் கிடையாது என்பதும் நிதர்சனம். மேலும் 100, 200 போட்டிகளில் விளையாடி அனுபவமுள்ள வீரர்கள் கூட வரலாற்றில் இதுபோன்ற கேட்ச்ககளுடன் உலக கோப்பையும் நழுவவிட்ட நிலையில் வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவமுள்ள அரஷ்தீப் சிங்கை விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற தெரிந்தும் இந்த அளவுக்கு விமர்சிக்கவும் திட்டவும் தேவையில்லை என்றே கூறலாம்.

அந்த வகையில் நிறைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அர்ஷிதீப் சிங்க்கு விராட் கோலி கொடுத்த ஆதரவு பின்வருமாறு. “அழுத்தத்தில் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். இந்த மிகப்பெரிய போட்டியில் அனைத்து நேரங்களும் கடினமாக இருந்தது. என்னுடைய முதல் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது ஷாஹித் அப்ரிடி பந்துவீச்சில் அவுட்டானேன். அதனால் மிகவும் விரக்தியடைந்த நான் அடுத்த நாள் காலை 5 மணி வரை தூங்காமல் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்”

“சொல்லப்போனால் அத்தோடு என் கேரியர் முடிந்தது என்றும் கவலைப்பட்டேன். எனவே இது போன்ற உணர்வுகள் இயற்கையானது. இது போன்ற சூழ்நிலையில் பாடங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த முறை அதே சூழ்நிலை வரும்போது தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இது போக முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், மதன் லால் போன்ற ஏராளமானவர்கள் விமர்சனத்தை சந்தித்துள்ள அர்ஷிதீப் சிங்க்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement