ஐக்கிய அரபு நாடுகளில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை கண்டாலும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த நிலைமையில் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக செப்டம்பர் 8ஆம் தேதியன்று தன்னுடைய கடைசி சம்பிரதாய போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்ததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
அதை தொடர்ந்து டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுலுடன் ஓபனிங் ஜோடியாக களமிறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதலே தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்யத் துவங்கினார். இந்த தொடரில் 35, 59*, 60, 0 என நல்ல பார்முக்கு திரும்பிய அவர் அதை இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க கிடைத்த வாய்ப்பில் முழுமையாக பயன்படுத்தினார். பவர் பிளே ஓவர்களில் ஆப்கானிஸ்தான் பவுலர்களை பந்தாடிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி அரைசதம் கடந்து பழைய பன்னீர் செல்வமாக மாறி ராகுலுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார்.
பழைய பன்ணீர்செல்வம்:
13 ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 119 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தபோது விராட் கோலிக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்த கேஎல் ராகுல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 62 (41) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நிலையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 (2) ரன்களில் அவுட்டான போது விராட் கோலியும் அவுட்டாகி விடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமும் 3 வருடமாக நடக்காதா என்று அனைவரும் ஏங்கிய தருணத்தை பரிசளித்தார்.
ஆம் தொடர்ந்து அற்புதமாக பேட்டிங் செய்த அவர் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தனது சதத்தை அடித்து 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் சந்தித்த விமர்சனங்களை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கினார். சரியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்த அவர் 71வது சதத்தை அடித்த மகிழ்ச்சியில் வழக்கம் போல ஹெல்மெட்டை கழற்றி வழக்கத்திற்கு மாறாக புன்னகை மலர்ந்த முகத்துடன் சதத்தை கொண்டாடியதை பார்த்த அத்தனை ரசிகர்களும் உணர்ச்சியில் பொங்கி தலை வணங்கினார்கள்.
இந்தியா வெற்றி:
மேலும் இவரையா விமர்சித்தோம் என்று தலைகுனிந்த அத்தனை விமர்சகர்களும் கைதட்டி பாராட்டிய நிலையில் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் 12 பவுண்டரி 6 சிக்சருடன் அவுட்டாகாமல் 122* (61) ரன்கள் விளாசினார். அவருடன் ரிஷப் பண்ட் 20* (16) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 212/2 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஹசரதுல்லா – குர்பாஸ் ஆகிய 2 தொடக்க வீரர்களையும் டக் அவுட் செய்து மிரட்டினார்.
அதனால் 1/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 3வதாக களமிறங்கிய இப்ராஹிம் ஜாட்ரான் ஒருபுறம் நங்கூரமாக நிற்க மறுபுறம் வந்த ஜனத் 2, நஜிபுல்லா ஜாட்ரான் 0, கேப்டன் நபி 7 என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாமல் இப்ராஹிம் ஜாட்ரான் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 64* (59) ரன்கள் குவித்து நின்ற போதிலும் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 111/8 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.
ரசிகர்கள் திருப்தி:
இதனால் 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற இந்தியா இந்த தொடரை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளது. மறுபுறம் இந்த தொடர் முழுவதும் அசத்திய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றதால் மனம் விட்டதைப் போல் இப்போட்டியில் போராடாமல் தோற்று நாடு திரும்புகிறது.
அதைவிட இந்த ஆசிய கோப்பையை தக்க வைக்காமல் தோற்றதால் மிகவும் சோகத்துடன் காணப்பட்ட இந்திய ரசிகர்கள் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து விமர்சனங்களை சுக்குநூறாக உடைத்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றி விராட் கோலி சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.



