உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் 2018 முதல் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் 2023 சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதே காரணத்தால் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் இதுவரை 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு 416 ரன்களை 83.2 என்ற சராசரியில் 176.27 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். குறிப்பாக அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் தமக்கு கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
நல்ல சராசரி:
அதனால் தோனிக்கு பின் இந்திய அணிக்கு சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று ஏற்கனவே அவரை சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் ரிங்கு சிங் உள்ளூர் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 54.70 என்ற நல்ல சராசரியை கொண்டுள்ளதாக 2024 டி20 உலகக் கோப்பையுடன் விடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
எனவே அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தால் அசத்துவார் என்று தெரிவிக்கும் விக்ரம் ரத்தோர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த 2 சீசன்களில் ரிங்கு சிங் மேலே உயர்ந்துள்ளார். 2 ஒருநாள், 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு இதுவரை தேசிய அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் அவர் அற்புதமான ஃபினிஷர்”
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 69 இன்னிங்ஸில் 54.70 என்ற நல்ல சராசரியை கொண்டுள்ளார். வலைப்பயிற்சியில் பார்த்த போது ரிங்கு ஏன் வெற்றிகரமான டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்க முடியாது? என்பதற்கான டெக்னிக்கல் தவறுகளை என்னால் பார்க்க முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிறந்த ஃபினிஷராக பெயர் பெற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன்”
இதையும் படிங்க: முன்னாடி எரிச்சலா இருக்கும்.. ஆனா இப்போ அவரை பாத்தா சந்தோஷமா இருக்கு – சஞ்சு சாம்சன் குறித்து அபினவ் முகுந்த் கருத்து
“ஆனால் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சராசரி 50க்கு மேலே உள்ளது. மேலும் அவர் அமைதியாக விளையாடும் திறமையை கொண்டுள்ளார். இந்த அனைத்து விஷயங்களும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் அவர் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக வளருவார் என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று கூறினார். முன்னதாக சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிங்கு சிங் ரிசர்வ் வீரராக இந்திய அணியில் இணைக்கப்பட்டிருந்தார். எனவே அவருக்கு டெஸ்ட் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்.



