
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரினை தோனிக்காக கைப்பற்றி அவரை கோப்பையுடன் வழி அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற்றதால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான அணிகளில் வீரர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல்வேறு புதிய வீரர்களை இணைத்து தற்போது தங்களது அணியை பலப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அதேபோன்று மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கரையும் ஏலத்தில் தேர்வு செய்திருந்தது. ஆரம்பத்தில் சென்னை அணிக்காக விளையாடி அஸ்வின் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்த வேளையில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
அதாவது கடைசியாக சிஎஸ்கே அணிக்காக 3591 நாட்களுக்கு முன்னர் விளையாடியிருந்த அவர் தற்போது மீண்டும் சென்னை அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்னை அணியில் விளையாடிய வீரர் என்ற சாதனையில் அவர் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் அஷ்வினின் இந்த சாதனையை நேற்றைய போட்டியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் முறியடித்துள்ளார்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி இருந்த விஜய் சங்கர் தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 3974 நாட்கள் கழித்து நேற்றைய போட்டியில் விளையாடியிருந்தார். இதன் மூலம் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டியில் தண்டனை பெற்ற ரியான் பராக்.. 12 லட்சம் காலி – என்ன நடந்தது?
நேற்று கவுகாத்தி நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 182 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே அணியால் 176 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதனால் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.