
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஒரு வழியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து விராட் கோலி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் கடந்த 18 வருடங்களில் தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி விட்டனர்.
ஆனால் விராட் கோலி மட்டுமே 2008 முதல் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 18 வருடங்களும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார். அது போக 9000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.
2013 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட விராட் கோலி 2016 சீசனில் 973 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். இந்நிலையில் இன்று உலக கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலியை 2008லயே வாங்கிய பின்னணி காரணத்தை அப்போதைய ஆர்சிபி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா பகிர்த்துள்ளார்.
2008 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்றதால் விராட் கோலியை தங்களுடைய அணிக்காக வாங்கியதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ராஜ் ஷமணி எனும் யூடியூப் சேனலில் மல்லையா பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி அணியை பவர் ஹவுசாக மாற்றக்கூடிய வீரர்களை நான் தேர்ந்தெடுத்தேன்”
“அந்த தேர்வுகளில் பெருமையானது விராட் கோலியை கண்டறிந்ததாகும். அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற அந்த இளம் பையன் ஸ்பெஷலானவர் என்று என்னுடைய உள்ளுணர்வு என்னிடம் சொன்னது. எனவே அவரை நான் வாங்கினேன். எங்களுடைய உள்ளூர் நட்சத்திரம் மற்றும் பெங்களூருவின் பெருமை ராகுல் டிராவிட்டை வாங்கியது மூளையற்ற முடிவில்லை”
இதையும் படிங்க: 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து நடராஜனை விளையாட வைக்காதது ஏன்? – ஹேமங் பதானி விளக்கம்
“ஜேக் கேலிஸ், அனில் கும்ப்ளே, ஜஹீர் கான் போன்ற சர்வதேச மற்றும் உள்ளூர் ஹீரோக்களை கலவையாக வாங்கிய நான் ஐபிஎல் கோப்பையை பெங்களூருவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தேன். அதன் அடிப்படையிலேயே அணியை உருவாக்கினேன். அண்டர்-19 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடிய விதம் என்னை இம்ப்ரஸ் செய்தது. அதனால் அவரை வாங்கினேன். 18 வருடங்கள் கழித்து அவர் இன்னும் அணியில் இருப்பது அற்புதமானது. 2008லயே முழு எனர்ஜி, சிறந்த திறமையைக் கொண்டிருந்த அவர் இந்திய கிரிக்கெட்டின் ஒரு மகத்தான பிளேயர்” என்று கூறினார்.