அடி பட்டத்தை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் டிரா செய்ய போராடிய 2 சாம்பியன்கள் – ரசிகர்கள் வாழ்த்து

Ashwin

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள், இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி நாள் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதனை தொடர்ந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 5 ஆம் நாள் ஆட்ட நேரத்தில் விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் சிலர் கூறி இருந்தனர். ஆனால் அது எல்லாம் தகர்க்கும் விதமாக ஐந்தாம் நாள் முழுவதும் பேட்டிங் செய்த இந்திய அணி மேலும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 40 ஓவர்களுக்கு மேலாக அஸ்வின் மற்றும் விகாரி ஆகியோர் களத்தில் நின்று இந்திய அணியை டிராவிற்கு அழைத்துச் சென்றனர். அஸ்வின் 39 ரன்களுடனும் விகாரி 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் இணைந்து விளையாடி போட்டியை டிரா செய்தனர்.

ashwin 1

மேலும் இந்த போட்டியின்போது விகாரிக்கு தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அப்போது அதற்கு வலி நிவாரணம் எடுத்துக்கொண்ட விகாரி மேலும் இறுக்கமான பேன்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு விளையாடினார். அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்களின் பவுன்சர் பந்தில் வயிற்றுப்பகுதியில் அடிவாங்கிய அஸ்வின் அதன் பின்னர் பேட் வைத்துக் கொண்டு இறுதிவரை போராடினார்.

- Advertisement -

vihari

இவர்கள் இருவரது மனம் தளராத ஆட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இவர்கள் இந்திய அணிக்காக போராடிய விதத்தை ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.