வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற நிலையில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆரம்பத்திலேயே 69/6 என தடுமாறினாலும் 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முகமதுல்லா 77 ரன்களும் மெஹதி ஹசன் 100* ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் 271/7 ரன்கள் குவித்து மிரட்டியது.
அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்த நிலைமையில் அனுபவத்தை காட்ட வேண்டிய விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல் போன்ற முக்கிய 3 கிரிக்கெட் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதனால் வேறு வழியின்றி காயத்துடன் களமிறங்கி அதிரடியாக 51* ரன்கள் எடுத்து போராடிய ரோகித் சர்மாவுக்கு டெயில் எண்டர்கள் கை கொடுக்க தவறியதுடன் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க தவறியதால் வென்ற வங்கதேசம் வலுவான இந்தியாவை மண்ணை வைத்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை கை பற்றியுள்ளது.
மாற்றம் தேவை:
இந்த தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்ததால் வெற்றி உறுதியான மமதையில் அஜாக்கிரதையாக செயல்பட்டது போலவே 2வது போட்டியிலும் ஆரம்பத்திலேயே 6 விக்கெட் எடுத்ததால் கத்துக்குட்டியான வங்கதேசம் என்ன செய்துவிடப் போகிறது? என்ற மிதப்பில் செயல்பட்ட இந்தியாவின் அஜாக்கிரகையான செயல்பாடுகள் தான் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதை விட பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி, தவான், ராகுல் உள்ளிட்ட சீனியர்கள் ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் போன்ற இளம் வீரர்களின் போராட்டத்தையும் வீணடிக்கும் வகையில் சுமாராக செயல்பட்டார்கள்.
இந்த தொடர் மட்டுமல்லாது சமீபத்திய ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என சமீப காலங்களாகவே இந்தியாவின் தோல்விக்கு திறமையான இளம் வீரர்களை தேர்வு செய்வதை விட நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்களை தேர்வு செய்வது முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அது போக ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக வரும் போது தடவலாக விளையாடுவதும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தோல்வியை பரிசளித்து வருகிறது. அதனால் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இங்கிலாந்து போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடும் அணுகு முறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப காலங்களாகவே குவிந்து வருகின்றன.
இந்நிலையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் அணுகு முறை மிகவும் பழையதாக இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் 2015க்குப்பின் அதிரடியான அணுகு முறையுடன் விளையாடி வெற்றிகரமாக செயல்படும் இங்கிலாந்தை பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறியுள்ளார். அத்துடன் ஐபிஎல் வந்த பின் எந்த டி20 உலக கோப்பையும் இந்தியா வெல்லவில்லை என்று வேதனை தெரிவிக்கும் அவர் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வகையில் தற்போதைய இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள் தேவை என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“உலகம் முழுவதும் பல துறைகளில் இந்தியா புதுமைகளை கண்டு வருகிறது. ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இன்னும் காலம் கடந்த பழமையான அணுகு முறையை இந்தியா பின்பற்றி வருகிறது. 2015 உலகக்கோப்பையில் வெளியேறிய பின் இங்கிலாந்து கடுமையான முடிவுகளை எடுத்ததால் தற்போது அற்புதமான அணியாக மாறியுள்ளது. அது போல இந்தியாவும் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக அணுகு முறையை கடுமையாக மாற்ற வேண்டும்”
“ஏனெனில் ஐபிஎல் தொடங்கிய பின் நாம் இதுவரை டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடந்த 5 வருடங்களில் இருதரப்பு தொடர்களை தவிர்த்து நமது செயல்பாடுகள் சுமாராகவே உள்ளது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் செய்த தவறிலிருந்து நாம் இன்னும் பாடங்களை கற்கவில்லை. மாற்றவும்” என்று கூறியுள்ளார்.



