இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தமிழக வீரரான வி.பி சந்திரசேகர்(வயது 57) நேற்று இரவு தனது மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிட தக்கது.
மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர், பயிற்சியாளர் மற்றும் டி.என்.பி.எல் அணி உரிமையாளர் போன்ற பல கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வந்தார். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மகேந்திர சிங் தோனி முதன்முதலில் சென்னை அணிக்கு பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் சந்திரசேகர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று தனது வீட்டு மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்க்கும்போது அவர் மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது இயற்கைக்கு மாறாக மரணம் என்று காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தற்கொலைக்கு காரணம் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடன் பிரச்சினையா அல்லது நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது போன்ற கோணத்தில் போலீசார் முதல்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். அவரது செல்போன் உரையாடல்களும் ஆய்வுக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.