சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்து தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
கம்பீர் எனக்கு சிறப்பான அறிவுரை வழங்கினார் :
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 124 ரன்கள் என்கிற குறைந்த ரன் குவிப்பை வழங்கியது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மாறியது. இருப்பினும் பந்துவீச்சின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அவரது இந்த பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தற்போது வருண் சக்கரவர்த்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : கண்டிப்பாக கடந்த மூன்று வருடங்கள் எனக்கு மிகவும் கடினமான பாதையாக இருந்தது. அண்மையில் நாங்கள் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது பயிற்சியாளராக இருந்த கம்பீர என்னிடம் நிறைய நேரம் ஒதுக்கி பேசினார்.
மேலும் எனக்கான வேலை இந்திய அணியில் என்ன? என்றும், எனது பங்களிப்பு என்ன? என்பது குறித்தும் தெளிவான விளக்கத்தை எனக்கு கொடுத்திருந்தார். அப்போது அவர் என்னிடம் : நீங்கள் போட்டிக்கு 30-40 ரன்கள் கொடுத்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் நீங்கள் எப்போதுமே விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் உங்களுடைய வேலை என்று என்னுடைய ரோலை தெளிவுபடுத்தி இருந்தார். அவர் கூறிய அந்த அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
அதையேதான் நான் நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தி ஐந்து விக்கெடுகளை வீழ்த்தி இருந்தேன். அதேபோன்று போட்டியின் இடைவெளியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடம் வந்து நிச்சயம் நாம் அனைத்து விதத்திலும் வெற்றியை நோக்கி சென்று பார்க்கலாம். அதனால் சேர்ந்து முயற்சி செய்வோம் என்று கூறினார். அந்த வகையிலேயே நான் என்னுடைய திறன் அனைத்தையும் வெளிப்படுத்தினேன்.
இதையும் படிங்க : தங்கம் மாதிரி ஒரு வீரர் இருக்கும்போது அவர் ஏன் பிளேயிங் லெவனில் விளையாடல – ராபின் உத்தப்பா ஆதங்கம்
ஒரு கட்டத்தில் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடியும் என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் தான். நிச்சயமாக நாம் எடுத்த ஸ்கோர் குறைவாக இருக்கும் போது ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். இப்படியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற முடியும் என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.



