இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை உங்களால் நிரப்ப முடியுமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு 3 கிரிக்கெட்டிலும் விளையாடி 765 விக்கெட்டுகள் எடுத்து சாதனைகளைப் படைத்த அஸ்வின் இடத்தை தம்மால் தற்போதைய நிலையில் நெருங்க கூட முடியாது என சக்ரவர்த்தி கூறினார். மேலும் தமக்கு கிடைக்கும் வாய்ப்பில் அசத்தி நிலையான இடம் பிடிப்பதே தற்சமயத்தில் தம்முடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.
அஸ்வின் இடம்:
“அஸ்வினுடன் என்னை ஒப்பிடுவது மிகவும் பெரியது. அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியவர். நான் இப்போது தான் கம்பேக் கொடுத்துள்ளேன். எனவே அஸ்வினுடன் ஒப்பிடும் அளவிற்கு எந்த உயரத்தையும் நான் எட்டவில்லை. ஆனால் இந்திய அணியில் விளையாடும் யாராக இருந்தாலும் நீண்ட காலம் விளையாடுவதற்கு விரும்புவார்கள்”
“நான் என்னுடைய செயல்முறைகளை பின்பற்றுகிறேன். அதற்காக நான் வெளிப்படுத்தும் கடினமான உழைப்பு என்னை தகுதியான இடத்திற்கு அழைத்துச் செல்லட்டும். அதுவே சிறந்த வழியாக இருக்கும். நான் யாருடைய இடத்தையும் நிரப்புவது பற்றி சிந்திக்கவில்லை. அஸ்வினுடைய இடம் என்பது நிரப்புவதற்கு மிகவும் பெரியது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே 500 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்”
எனக்கான இடம் போதும்:
“அதை நான் நெருங்க கூட இல்லை. டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருப்பீர்கள். அதையும் தாண்டி நீங்கள் ஏதாவது வித்தியாசமாக முயற்சித்தால் அது இன்னும் உள்ளுணர்வின் அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்த உதவும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்
அந்தப் போட்டியில் முதல் முறையாக தமது சொந்த ஊரான சென்னையில் தமிழக ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியாவுக்காக விளையாடுவது ஸ்பெஷல் என்று வருண் கூறியுள்ளார். மேலும் அப்போட்டியில் தம்முடைய குடும்பம் தனது ஆட்டத்தை பார்க்க வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடி அவர் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்ற தயாராகி உள்ளார்.