தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முன்னணி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். அவரது இந்த சிறப்பான பந்து வீச்சின் காரணமாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டி20 பவுலராக இந்திய அணியிலும் தேர்வானார். ஆனால் அதிர்ஷ்டவசமின்றி அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து காயத்திற்கான சிகிச்சை பெற்று மீண்டும் கம்பேக் கொடுத்த சக்கரவர்த்தி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வானார். அப்போது மீண்டும் பிட்னஸ் டெஸ்டில் தோல்வி அடைந்து மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார்.
இப்படி தொடர்ந்து வாய்ப்புகள் தவறி கொண்டு சென்ற நிலையில் இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இலங்கை தொடருக்கான சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்துள்ளார். இம்முறை எந்தவித பிரச்சனையுமின்றி இலங்கை சென்றுள்ள வருண் சக்ரவர்த்தி ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் டி20 கிரிக்கெட்டில் முதன்மை பந்துவீச்சாளராக இந்தியில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

ஏனெனில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணி இலங்கை செல்லும் பொழுது இளம் வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். மேலும் வீரர்களின் திறனுக்கு ஏற்ப அவர்கள் கண்டிப்பாக ஆடும் லெவனில் விளையாடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி நிச்சயம் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே நாளைய இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி விளையாடுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



