இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்த இந்தியா உலக டி20 சாம்பியனுக்கு அடையாளமாக செயல்பட்டது. இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் சரவெடியாக விளையாடிய அபிஷேக் சர்மா டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதல் முறையாக நுழைந்துள்ளார். கடந்த வருடம் அறிமுகமான அவர் ஜிம்பாப்வேவுக்கு சதத்தை அடித்து அசத்தினார். இருப்பினும் அதன் பின் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் இங்கிலாந்து தொடரில் ஆரம்பத்திலேயே 72 ரன்கள் விளாசினார்.
அபிஷேக் அபாரம்:
அதை விட மும்பையில் விளையாடிய கடைசிப் போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்க விட்ட அபிஷேக் 135 ரன்களை விளாசி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக 38 இடங்கள் முன்னேறியுள்ள அவர் தற்போது உலகின் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேன் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் இங்கிலாந்து தொடர் துவங்குவதற்கு முன்பாக 99வது இடத்தில் இருந்த அபிஷேக் தற்போது 829 புள்ளிகளுடன் ராக்கெட் வேகத்தில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன் காரணமாக திலக் வர்மா 803 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். மேலும் 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு இந்தியாவின் திலக் வர்மா, அபிஷேக் சர்மா ஆகிய இருவருமே போட்டியை கொடுத்து வருகிறார்கள். மற்ற படி சுமாராக விளையாடிய சூரியகுமார் 5வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
நூலிழையில் வருண்:
அதே போல தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கம்பேக் கொடுத்தது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐசிசி டாப் 10 டி20 பவுலர்கள் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறியுள்ள அவர் 705 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து முதல் ஒன்டே நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
முதலிடத்தில் 707 புள்ளிகளுடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகில் ஹொசைன் நூலிழை வித்யாசத்தில் இருக்கிறார். எனவே அவரை விரைவில் வருண் முந்துவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அதே போல இந்தியாவின் ரவி பிஸ்னோய் 6, அர்ஷ்தீப் சிங் 9, அக்சர் படேல் 13வது இடங்களில் உள்ளார்கள். ஹர்திக் பாண்டியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டி20 ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.