
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணிகளிலும் சில இளம் வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத வேளையில் அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகவீரராக களம் கண்டார்.
அப்படி ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான அவர் தனது முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். பின்னர் அடுத்தடுத்து மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதத்தை விளாசி மிக இளம் வயதில் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
அதுமட்டுமின்றி பல்வேறு உலக சாதனைகளையும் அந்த சதத்தின் மூலம் நிகழ்த்தி இருந்தார். அந்த போட்டிக்கு பின்னர் உலகமே திரும்பி பார்க்கக் கூடிய ஒரு வீரராக வைபவ் சூர்யவன்சி மாறினார். பின்னர் 2025 சீசனில் தொடர்ந்து விளையாடிய அவர் அடுத்த சீசனிலும் ராஜஸ்தான் அணிக்காக துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்ததாக 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காகவும் அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தான் எவ்வாறு தயாராகி வருவேன் என்பது குறித்த சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் விளையாடுவது அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரு கனவு போன்றது.
அதே போன்று தான் எனக்கு இந்த ஐபிஎல் தொடர் அமைந்தது. இந்த தொடரில் மிகவும் பாசிட்டிவான பல விடயங்கள் நடந்தன. ஆனாலும் நான் அடுத்த சீசனில் என்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அதற்காக பயிற்சி செய்யவிருக்கிறேன். மேலும் இந்த ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து இன்னும் இருமடங்கு சிறப்பாக விளையாடி அடுத்த ஆண்டு எங்களது அணி இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : முதல் தொடரை வைத்தே சுப்மன் கில்லின் திறனை சோதிக்க கூடாது.. கொஞ்சம் டைம் குடுக்கனும் – ஹர்பஜன் சிங் கருத்து
அதுதான் என்னுடைய இலக்கு. அதில் கவனம் செலுத்தி நான் இனிவரும் காலங்களில் பயிற்சி செய்யப்போகிறேன் என வைபவ் சூர்யவன்ஷி கூறினார். 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளதாக ஏற்கனவே பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.