
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்டர்-19 இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தி சமன் செய்தது. அந்த நிலையில் 3வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி நார்த்தம்டனில் இருக்கும் கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி இருதரப்புக்கும் தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40 ஓவரில் 268/6 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டாகின்ஸ் 62, ஐசக் முகமது 41, பென் மெய்ஸ் 31, கேப்டன் தாமஸ் ரெவ் 76* ரன்களை அடித்தனர்.
சூர்யவன்சி முரட்டுத்தனம்:
இந்திய அண்டர்-19 அணிக்கு அதிகபட்சமாக கனிஸ்க் சௌஹான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் அபிஞ்சான் குண்டு 12 (11) ரன்னில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூரியவன்சி அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன்களை சேர்த்தார். கடந்த ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.
அதே ஃபார்மில் இத்தொடரிலும் அதிரடியாக விளையாடும் அவர் இந்தப் போட்டியில் பட்டாசாக பேட்டிங் செய்து வெறும் 20 பந்தில் 50 ரன்கள் அடித்தார். தொடர்ந்து முரட்டுத்தனமாக அடித்த அவர் 6 பவுண்டரி 9 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 86 (31) ரன்களை 277.41 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த மவுலியராஜ் சிங் டக் அவுட்டானார்.
இளம் இந்திய அணி வெற்றி:
ஆனால் சூரியவன்சியுடன் சேர்ந்து விளையாடிய விஹான் மல்கோத்ரா பொறுப்புடன் 46 (34) ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் ராகுல் குமார் 27, ஹர்வன்ஸ் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் லோயர் மிடில் ஆர்டரில் கனிஸ்க் சௌஹான் 43* (42), அம்ரிஸ்க் 31* (30) ரன்களை எடுத்ததால் 34.3 ஓவரிலேயே 274/6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:
அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியாவுக்கு சூரியவன்சி ஆட்டநாயகனை போல விளையாடி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்தப் போட்டியின் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் (9) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2009இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மந்தீப் சிங், 2022இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ராஜ் பாவா தலா 8 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் அலெக்சான்டர் வேட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இங்கிலாந்து தோற்றது.