- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 சிக்ஸ் 15 பந்தில் 50.. ரிஷப் பண்ட்டின் 9 வருட சாதனையை உடைத்த சூர்யவன்சி.. மற்றொரு புதிய உலக சாதனை

ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை வரும் ஜனவரி 15ஆம் தேதி நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அண்டர்-19 அணி டிஎல்எஸ் விதிமுறைப்படி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி வில்லோமூர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 49.3 ஓவரில் 245 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேசன் ரௌல்ஸ் சதமடித்து 114 (113) ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக கிஷான் குமார் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சூர்யவன்சி உலக சாதனை:

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு தற்காலிக கேப்டன் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார். குறிப்பாக இதே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 2வது இன்னிங்சில் மழை வந்தது. அதே போல இந்தப் போட்டியிலும் மழை வருவதற்கான வாய்ப்பிருந்ததால் அதற்கு முன் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய அவர் சிக்ஸர்களாக பறக்க விட்டார்.

அந்த வகையில் பட்டாசாக விளையாடிய சூரியவன்சி வெறும் 15 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2016 அண்டர்-19 உலகக் கோப்பையில் தாக்காவில் நடைபெற்ற நேபாளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரிஷப் பண்ட் 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

இளம் இந்தியா வெற்றி:

அந்த 9 வருட சாதனையை இப்போட்டியில் உடைத்த சூரியவன்சி வெறும் 1 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 68 (24) குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 20 (19) ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் வேதாந்த் திரிவேதி 31* (57), அபிஞான் குண்டு 48* (42) ரன்களை எடுத்தனர்.

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறாதது ஏன்? – விளக்கம் இதோ

அதனால் 23.3 ஓவரில் இந்தியா 176/2 ரன்கள் எடுத்த போது வந்த மழை மேற்கொண்டு போட்டியை நடத்த விடாமல் செய்தது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்க நடுவர்கள் டிஎல்எஸ் விதிமுறையை பின்பற்றினர். அப்போது தென்னாபிரிக்காவை விட கூடுதல் ரன்கள் எடுத்திருந்த காரணத்தால் இந்திய அண்டர்-19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்திய அண்டர்-19 அணி இத்தொடரை கடைசிப் போட்டிக்கு முன்பாகவே வென்று அசத்தியுள்ளது.

- Advertisement -