அடப்பாவிங்களா இதிலும் ஊழலா ! வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் – ரஞ்சி கோப்பையில் அம்பலமான அதிர்ச்சி செய்தி |

ranji trophy
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 2 பகுதிகளாக நடைபெறும் இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அதில் அசத்தலாக செயல்பட்ட அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து இந்த தொடரின் நாக் அவுட் சுற்றின் முதல் பகுதியான காலிறுதிப் போட்டிகள் கடந்த ஜூன் 6-ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அழுர் நகரில் நடைபெற்ற 2-வது காலிறுதி போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பையை கத்துக்குட்டியான உத்தரகாண்ட் எதிர்கொண்டது.

அப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த மும்பை முதல் இன்னிங்சில் 647/8 ரன்களும் 2-வது இன்னிங்சில் 261/3 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆனால் மும்பையின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத உத்தரகாண்ட் முதல் இன்னிங்சில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2-வது இன்னிங்சில் அதைவிட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 69 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 725 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மும்பை ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக உலக சாதனை படைத்தது.

- Advertisement -

அம்பலமான ஊழல்:
இந்த மிகப்பெரிய வெற்றி இந்தியா முழுவதும் கிரிக்கெட் பிரிவில் மிகப் பெரிய செய்தியாக எதிரொலித்தது. அதனால் கவனம் ஈர்க்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் அணி வீரர்கள் இதுதான் சமயம் என்று மிகப் பெரிய உண்மையையும் ஊழலையும் போட்டு உடைத்துள்ளனர். ஆம் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இதே கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் வருடத்திற்கு ஒரு வீரரால் ஒரு லட்சம் கூட சம்பாதிப்பது கடினமான ஒன்றாகும்.

இருப்பினும் தங்களது மாநில அணிக்காக சிறப்பாக விளையாடினால் என்றாவது ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்து ஐபிஎல் தொடரிலும் விளையாடி தங்களது வாழ்வாதாரத்தையும் முன்னேற்றலாம் என்ற கனவுடன் பல வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுகின்றனர். அந்த நிலைமையில் உத்தரகாண்ட் அணிக்கு விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ வழிகாட்டுதலின் படியும் அந்த மாநில கிரிக்கெட் வாரிய விதிமுறை படியும் களத்தில் விளையாடும் நாட்களில் ஒரு நாளைக்கு 1500 ரூபாய் சம்பளமாக கொடுக்க வேண்டும். போட்டியை பொருத்து அது 1000 முதல் 2000 ரூபாய்கள் வரை செல்லும்.

- Advertisement -

100 ரூபாய்:
ஆனால் உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 12 மாதங்களாக வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. ஆனால் உத்தரகாண்டில் கூலி வேலை செய்யும் நபர் கூட ஒரு நாளைக்கு 800 ரூபாய் என்ற அளவில் சம்பாதிக்கிறார்கள். இதை வெளியில் சொன்னால் அணியில் இடம் பறி போய்விடும் என்ற சூழ்நிலையில் இப்போது கூட ஒரு பெயர் வெளியிட விரும்பாத வீரர் தான் இந்த மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் வாரிய வரவு செலவு கணக்கில் கடந்த 12 மாதங்களுக்கு உண்டான காலகட்டத்தில் உண்மைக்கு புறம்பான பொய் கணக்குகள் காட்டப்பட்டுள்ளது. அந்த கணக்குகளின் படி உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு 1,74,07,346 ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை உணவுக்காகவும் 49,58,750 ரூபாய் என்ற பெரிய தொகை தினந்தோறும் விளையாடும் போட்டிகளுக்கு சம்பளமாகவும் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோக 22 லட்சத்துக்கு தண்ணீர் பாட்டில்களும் 35 லட்சத்துக்கு வாழைப்பழம் உட்பட போட்டியின் போது தெம்பு கொடுக்கக் கூடிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலும் ஊழலா:
இது பற்றி ஒரு மூத்த வீரர் உத்தரகாண்ட் அணி மேலாளரிடம் கேட்ட போது. “ஏன் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறாய்? உங்களுக்கான பணம் வந்து சேரும். அது வரை ஜொமோடோ அல்லது ஸ்விக்கி ஆகியவற்றில் ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்” என்று சொந்தப் பணத்தை உபயோகப்படுத்துமாறு அணி மேலாளர் தெனாவட்டாக பேசியுள்ளார். அம்மாநில கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் பல தலைமை முக்கிய நிர்வாகிகள் செய்த மிகப்பெரிய ஊழல் தான் இதற்கு காரணம் என்று தெரிய வருகிறது.

பொதுவாக இந்தியாவில் கல்வி, மருத்துவம் போன்ற புனிதமான வேலைகளில் கூட லஞ்சம், ஊழல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற கனவில் குறைந்த சம்பளத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த சம்பளத்திலும் நிர்வாகிகள் என்ற பெயரில் ஊழல் செய்வது வேதனைக்குரிய அம்சமாகும். இதை அறியும் கிரிக்கெட் ரசிகர்கள் “அடப்பாவிங்களா இதிலும் ஊழலா” என்று கோபப்படுவதுடன் இதுபற்றி பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement