
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவரை 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி துவக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய ரோகித் சர்மா இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார்.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா சமீப காலங்களில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறார்.
அந்த ஸ்டைலில் விளையாடிய அவர் 2024 20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா பார்ப்பதற்கு சோம்பேறித்தனமானவராக தெரிந்தாலும் கிரிக்கெட்டைப் பற்றிய தெளிவான அறிவை கொண்டவர் என்று இந்தியாவின் பிரபல அம்பையர் அனில் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வருவது போல் தெரியும் பந்துகளை ரோஹித் சர்மா 120 கி.மீ வருவதைப் போல அடிப்பார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் பார்ப்பதற்கு சாதாரணமானவராக தெரிவார். ஆனால் சாதுரியமான வீரரான அவர் விளையாட்டைப் பற்றிய நல்ல அறிவைக் கொண்டவர். அவருடைய கூர்மையான அறிவை அவரின் பேட்டிங்கை வைத்து நீங்கள் கணிக்க முடியாது. அவர் எதிர்கொள்ளும் பந்துகள் 120 கிலோமீட்டர் போல தெரியும். ஆனால் அதே பந்துகளை மற்றவர்கள் எதிர்கொள்ளும் போது 160 கிலோமீட்டர் போல தெரியும்”
“நடுவர்களிடம் அவர் நிறைய முறையீடு செய்வார். பின்னர் அப்படியே இருக்கட்டும் என்று சொல்வார். ரோஹித் சர்மா போன்ற வீரருக்கு எதிராக அம்பயரிங் செய்வது எளிது. ஏனெனில் குழப்பமற்ற முறையில் பேட்டிங் செய்யும் அவரை நீங்கள் அவுட் அல்லது நாட் அவுட் என்று நேராக சொல்ல முடியும். சிறந்த புட்ஒர்க்கை கொண்ட அவர் முன்னோக்கி அவசரப்பட்டு வராமல் பின்னோக்கி நின்று பந்துக்காக காத்திருப்பார். கிரிக்கெட்டில் பந்தை பற்றிய அறிவு என்ற ஒரு விஷயம் இருக்கிறது”
இதையும் படிங்க: சச்சினின் சாதனையை எல்லாம் முறியடிக்கும் ஆசை இல்லை.. என்னோட இலக்கே வேற – ஜோ ரூட் ஓபன்டாக்
“அவரிடம் அது நிறையவே உள்ளது. அவருக்கு பந்தை நோக்கி எப்போதும் முன்னே நகர வேண்டும் என்பது தெரியும். அவருடைய புல் ஷாட்டை பாருங்கள் அது நம்ப முடியாதது. கொல்கத்தாவில் அவர் 200+ ரன்கள் அடித்த போட்டியில் நான் டிவி அம்பயராக இருந்தேன். அப்போட்டியில் யாருக்கும் பந்துகளை கூட சிக்ஸராக அடித்த ரோஹித் வித்தியாசமான கிளாஸ் நிறைந்தவர். அவர் சோம்பேறித்தனமாக தெரிந்தாலும் வித்தியாசமான ஐடியா கொண்டவர். தன்னுடைய நாளில் அவர் ஒன் மேன் ஆர்மி. அவருடைய கேப்டன்சியும் நன்றாக உள்ளது” என்று கூறினார்.