ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை தோற்கடித்தது. அடுத்ததாக இந்திய அணி செப்டம்பர் 14ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. முன்னதாக ஒரு காலத்தில் பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தெறிக்க விடுபவர்களாக இருந்தனர்.
இருப்பினும் தற்போதைய தலைமுறையில் ஷாஹின் அப்ரிடி, நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோரும் ஆரம்பக் காலங்களில் அசத்தினார்கள். நாளடைவில் சுமாராக செயல்பட்ட அவர்கள் பாகிஸ்தானின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் சிஸ்டத்தை இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் உமர் குல் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் சிறந்த சிஸ்டம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் சிஸ்டத்தில் பிரச்சனை உள்ளது. நாங்கள் விளையாடிய காலங்களில் கூட சீனியர் பவுலர்கள் தயங்குவார்கள். அதாவது நம்முடைய பவுலர்கள் 70 – 80% ஃபிட்டாக இருந்தால் கூட நான் விளையாட விரும்புகிறேன் என்று சொல்வார்கள். ஏனெனில் நம்முடைய இடத்தில் வேறு யாரேனும் சிறப்பாக விளையாடினால் இடம் பறி போய்விடும் என்று அவர்கள் கருதுவார்கள்”
“அதனாலேயே நம்முடைய கலாச்சாரத்தில் சுழற்சிமுறை கொள்கை இல்லை. செயல்பாடுகளை மட்டுமே பார்க்கும் நாம் புதிய வீரர் வந்து அசத்தினால் அவரை விளையாட வைக்கிறோம். அதே போல பாகிஸ்தான் கலாச்சாரத்தில் சுழற்சி முறை கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். சீனியர் பவுலர் ஃபிட்டாக மாறினால் அவருக்கு வாய்ப்பளிப்பதே உங்களுடைய முன்னுரிமையாக இருக்க வேண்டும்”
பாகிஸ்தான் கத்துக்கனும்:
“அதற்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதனால் காயம் ஏற்பட்டது? எப்படி உணர்கிறோம்? என்பது பற்றிய விவரங்கள் வீரர்களுக்கே தெரியும். அதற்கு தகுந்தார் போல் மருத்துவர்கள் உங்களை 4 – 5 வாரங்கள் வரை ஓய்வு எடுக்கச் சொல்வார்கள். அந்த வகையில் காயத்திலிருந்து குணமடைவது வீரர்களுக்கு முக்கியம்”
இதையும் படிங்க: அபிஷேக் – முஹீம், கம்பீர் என்னை மாதிரி இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் செய்யாதீங்க.. கம்ரான் அக்மல் கோரிக்கை
“ஆனால் பாகிஸ்தானில் வீரர்கள் காயத்தைச் சந்திக்கும் போது நம்முடைய இடம் பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் வேகமாக விளையாட வந்து விடுகிறார்கள். இந்தியாவிடம் சிறந்த சிஸ்டம் இருக்கிறது. அங்கே வீரர்கள் முழுமையாக குணமடைவதற்கான காலத்தை மருத்துவர்கள் தெளிவாகச் சொல்கின்றனர். அப்போது தான் உங்களால் முழுமையாக குணமடைய முடியும். சுழற்சி முறை கொள்கையும் முக்கியமல்லவா? எடுத்துக்காட்டாக அவர்கள் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாட வைக்கிறார்கள். அதனால் முதன்மை பவுலர் ஃபிட்டாகி வரும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான முன்னுரிமையை அவர்கள் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.



