
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடி அமீரகம் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக அமீரகம் மோசமான உலக சாதனை படைத்தது.
அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர். அதனால் 4.3 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட இந்தியா எளிதாக வென்று ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவக்கியது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா உலகச் சாம்பியன் என்பதற்கு நிகராக செயல்பட்டதாக அமீரக அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் பாராட்டியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்காத அளவுக்கு இந்திய அணியிடம் திறமை இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான அணியின் மேனேஜரான ராஜ்புட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இது போன்ற பவுலர்களை எப்போதும் எதிர்கொண்டதில்லை. அவர்கள் நட்சத்திர வீரர்களின் பெயரைப் பார்த்து அதிகமாக பின்னடைவை சந்தித்தார்கள்”
“பொதுவாக உலகச் சாம்பியன்ஸ் எதிரணிகளை நொறுக்குவார்கள். நாங்கள் பவர்பிளே வரை நன்றாக விளையாடினோம். ஆனால் ஸ்பின்னர்கள் வந்து வேலையைத் துவங்கிய போது அனைத்தும் மாறியது. பிட்ச் பெரிதாக சுழலுக்கு சாதகமாக இல்லை. ஆனால் குல்தீப், வருண் ஆகியோருக்கு எதிராக டாப் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறுவார்கள்”
இதையும் படிங்க: போட்டி முடிந்த கையோடு நேராக சென்று யு.ஏ.இ வீரரை சிரித்தபடி கட்டியணைத்த சுப்மன் கில் – யார் இவர்?
“அர்ஷ்தீப் சிங் போன்றவர் பிளேயிங் லெவனில் விளையாட முடியவில்லை. அதுவே அவர்களுடைய அணியின் ஆழத்தைப் பற்றி பேசுகிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை சந்திக்கிறது. அந்தப் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.