- Advertisement -
ஐ.பி.எல்

காய்ச்சலால் போன மேட்ச் முடியல.. 2 காட்டடி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை காலி செய்தது பற்றி பேசிய தேஷ்பாண்டே

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக மே 5ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 168 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 32, டேரில் மிட்சேல் 30, ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே சென்னையின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அசத்திய தேஷ்பாண்டே:
அதிகபட்சமாக பிரப் சிம்ரன்சிங் 30, சசாங் சிங் 27 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 3 வருடங்கள் கழித்து 5 தோல்விகளுக்கு பின் பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை வெற்றி கண்டது. இந்தப் போட்டியில் தூஷார் தேஷ்பாண்டே 4 ஓவரில் 35 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து சென்னையின் வெற்றியில் பங்காற்றினார்.

குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ் ஆகிய 2 வெளிநாட்டு காட்டடி பேட்ஸ்மேன்களை முறையே 7, 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய அவர் ஆரம்பத்திலேயே பஞ்சாப்பை கட்டுப்படுத்தி சென்னையின் கையை ஓங்க வைத்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் காய்ச்சலால் விளையாட முடியாத நிலையை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் ஸ்லோவான பிட்ச்சில் சரியான லென்த்தில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் இது குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாகும். இந்த போட்டியை நாங்கள் கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலையில் இருந்தோம். கடந்த போட்டியில் விளையாடுவதற்கு முயற்சித்தேன். ஆனால் காய்ச்சல் காரணமாக முடியவில்லை”

இதையும் படிங்க: மேட்ச் பகலில் நடந்ததால் அது எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு.. இது தான் என்னோட வேலை.. ஜடேஜா பேட்டி

“எனவே இப்போட்டியில் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இது மிகவும் நெருக்கடியான போட்டி. உயரமான இடத்தில் உள்ள இந்த மைதானத்தில் பந்து சில வேலையை செய்தது. அதை பயன்படுத்தி விக்கெட் எடுப்பது என்னுடைய வேலையாகும். ஸ்லோவாக இருந்த இந்த பிட்ச்சில் சரியான லென்த்துகளில் பந்தை அடித்தால் பேட்ஸ்மேன்களால் கிடைமட்டமான ஷாட்டுகளை அடிக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -