ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
ஹராரே நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடந்த போட்டியில் சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகிய 3 உலகக்கோப்பை வென்ற வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அதனால் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் நிகழாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அறிமுக வாய்ப்பு:
இருப்பினும் இந்தப் போட்டியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக துஸார் தேஷ்பாண்டே இந்திய அணியில் சேர்க்கப்படுவதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்துள்ளார். குறிப்பாக கடந்த போட்டியில் டெத் ஓவர்களில் ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கியதால் தேஷ்பாண்டேவை இந்திய அணிக்குள் கொண்டு வருவதாக கில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவு ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.
ஏனெனில் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமாகி விளையாடினார். அங்கு பல தருணங்களில் அவர் விக்கெட்டுகளை எடுத்தாலும் அதற்கு சமமாக ரன்களை வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தது சிஎஸ்கே ரசிகர்களையே கடுப்பாக வைத்தது. ஆனால் கேப்டன் தோனி அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து அவரை வைத்தே 2023 ஐபிஎல் கோப்பையை வென்றார்.
அப்படி தோனி தலைமையில் ஓரளவு அசத்தியதால் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வான துசார் தேஷ்பாண்டே இப்போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஆனால் இங்கே கேப்டன் தோனி கிடையாது என்பதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கலக்கம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் நாட்டுக்காக விளையாடுவதற்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்துவார் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: 4க்கு 4.. 2000 – 2024 வரை.. ஓய்வு பெற்றும் அசுரன் ஆஸியை அடக்கி நாக் அவுட் செய்த இந்திய நாயகன் யுவராஜ் சிங்
மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய எஞ்சிய அனைத்து வீரர்களும் இப்போட்டியிலும் விளையாடுகின்றனர். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பந்து பேசுகிறோம். இது புதிய பிட்ச் போல தெரிகிறது. எனவே அதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் டெத் ஓவர் பவுலிங் சுமாராக இருந்தது. ஆவேஷ் கான் இடத்தில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமாக விளையாடுகிறார்” என்று கூறினார்.



