
ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் துவங்குகிறது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது. அவரது தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக கடைசியாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
எனவே அவர்களுடைய ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடி வரும் விராட், ரோஹித் சர்மா நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகிறார்கள்.
இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகியுள்ளது. அதனாலேயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் என்று ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் பாராட்டியுள்ளார். எனவே 2027 உலகக் கோப்பையில் அவர்கள் இந்தியாவுக்காக விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு நல்லது என்றும் ஹெட் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன் அக்சர் பட்டேலுடன் இணைந்து அவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு.
“அவர்கள் இந்தியாவுக்காக அற்புதமான வீரர்கள். என்னை விட அவர்களைப் பற்றி அக்சர் உயர்வாக பேசுவார். ஆனால் அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் தரமான 2 வீரர்கள். விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர். ரோஹித் சர்மா அந்தளவுக்கு கிடையாது. இருப்பினும் ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது”
இதையும் படிங்க: பாகிஸ்தானால் இந்தியாவின் கோப்பையை தான் பறிக்க முடியும்.. அதை பறிக்க முடியாது.. வருண் பதிலடி
“ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் மிஸ் செய்யப்படுவார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். ஆனால் அவர்கள் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முயற்சி செய்வார்கள். அதுவரை அவர்கள் விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு சிறப்பானது” என்று கூறினார்.