இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதுபோன்ற சூழ்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அவர் முதல் இரண்டு போட்டிகளில் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா விலகுவது சரியில்லை என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.
ஹெட் ஆதரவு:
இருப்பினும் தம்முடைய குழந்தை பிறக்க உள்ளதால் ரோஹித் சர்மா எடுத்துள்ள அந்த முடிவு சரியானது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா இடத்தில் இருந்திருந்தால் தாமும் இதே முடிவை எடுத்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“100% நான் ரோகித் சர்மாவின் முடிவுக்கு ஆதரவு கொடுக்கிறேன். அவருடைய சூழ்நிலையில் இருந்தால் நானும் இதையே செய்திருப்பேன். கிரிக்கெட்டில் விளையாடும் நாங்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறோம். நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எனவே நாங்களும் கவனிக்கப்படுகிறோம். ஆனால் முக்கிய போட்டிகளைத் தவிர விடும் போது சில சாதனைகளையும் தவற விடுகிறோம்”
இந்தியா அசத்தும்:
“இருப்பினும் அவருடைய நிலையிலிருந்து இருந்தால் நானும் அதையே செய்திருப்பேன். உங்களுக்கு அந்த நேரம் திரும்ப கிடைக்காது. ஆனாலும் இந்தத் தொடரில் மீண்டும் அவர் விளையாட வருவார் என்று நம்புகிறேன். எங்களுடைய வரலாற்றில் எந்த இந்திய அணியும் எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த இரண்டு தொடர்களில் அவர்கள் நிறைய காயங்கள், வலிகள், சந்தேகங்கள் ஆகியவற்றை சந்தித்தார்கள்”
இதையும் படிங்க: அவரை மாதிரி ஒரு பிளேயர் இருந்தா தான் இம்முறை நாம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் – ஹர்பஜன் கருத்து
“மக்கள் அவர்களை கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள். எனவே இந்திய அணிக்காக யார் விளையாடினாலும் அவர்கள் வலுவான செயல்பாடுகளையே வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார். அந்த வகையில் முதல் போட்டியில் ரோகித் விளையாடவில்லையெனில் பும்ரா இந்தியாவை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



