கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் தங்களது பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதிலும், பவுலர்கள் விக்கெட் எடுப்பதன் மூலம் சாதனைகள் படைத்து வருகின்றனர். இதில் பேட்ஸ்மேன்கள் சதம் மற்றும் அரை சதம் அடித்து மாபெரும் சாதனையை படைத்து வருகின்றனர். இவ்வாறு இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ரிக்கி பாண்டிங் – 14 சதங்கள் :
1995 முதல் 2012 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய இவர் ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்தார். ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக 88 சர்வதேச போட்டியில் 14 முறை சதங்களை விளாசியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 8 சதங்களும் விளாசியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் – 12 சதங்கள் :
ஸ்டீவ் ஸ்மித், தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஆவார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் மூலம் அறிமுகமானவர். ஸ்மித் 246 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 37 சர்வதேச போட்டியில் 12 முறை சதங்களை விளாசியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 5 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 7 சதங்களும் விளாசியுள்ளார்.
குமார் சங்கக்காரா – 11 சதங்கள்
குமார் சங்கக்கார, 2000 முதல் 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடியவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சங்கக்காரா 97 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 11 முறை சதங்களை விளாசியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 6 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 5 சதங்களும் விளாசியுள்ளார்.
சர் விவி ரிச்சர்ட்ஸ் – 11 சதங்கள் :
1974 முதல் 1989 வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். ரிச்சர்ட்ஸ் 97 சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 11 முறை சதங்களை விளாசியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 3 சதங்களும் டெஸ்ட் போட்டியில் 8 சதங்களும் விளாசியுள்ளார்.
மஹேலா ஜெயவர்தனே – 10 சதங்கள் :
1997 முதல் 2014 வரை இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் மஹேல ஜெயவர்தனே. இவர் இந்தியாவிற்கு எதிராக 110 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 10 முறை சதங்களை விளாசியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 4 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 6 சதங்களும் விளாசியுள்ளார்.
சனத் ஜெயசூரியா – 10 சதங்கள் :
சனத் ஜெயசூரியா, 1990 முதல் 2010 வரை இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இவர் இந்தியாவுக்கு எதிராக மொத்தம் 10 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 7 சதங்களும் டெஸ்ட் போட்டியில் 3 சதங்களும் விளாசியுள்ளார்.