ஐபிஎல் 2022 : இந்த சீசனில் திறமையால் கவனத்தை ஈர்க்கபோகும் 5 இளம் வீரர்களின் – லிஸ்ட் இதோ

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இம்முறை மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள இந்த தொடரில் புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

5 இளம் காளைகள்:
ஐபிஎல் தொடரின் தாரக மந்திரம் “திறமைக்கான வாய்ப்பு” என்பதை பல ரசிகர்கள் அறிவார்கள் என நம்புகிறேன். அதாவது திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பை அளித்து அவர்களை உலக அரங்கில் ஒரு தரமான வீரராக அறிமுகப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐபிஎல் தொடராகும்.

அந்த வகையில் கடந்த 10 வருடங்களாக நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வாழ்வையும் அளித்து வளர்த்து வரும் ஐபிஎல் தொடரால் இன்று இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாது உலகின் பல்வேறு அணிகளுக்கும் நிறைய தரமான வீரர்கள் கிடைத்துள்ளார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் இந்த வருடம் சிறந்து விளங்க போகும் டாப் 5 நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. யாஷ் துள்: சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை 2022 தொடரை இந்திய அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் இந்திய அணியை டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் யாஷ் துள் அபாரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். ஒரு ஆல்-ரவுண்டராக இளம் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இவர் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக ஏதோ ஒரு அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே அதன்பின் நடந்த ஏலத்தில் அவரை அவரின் சொந்த மாநிலமான டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி போட்டு வாங்கியது. அத்துடன் சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை டெல்லி அணிக்காக களமிறங்கிய அவர் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து சாதனையும் படைத்தார். இப்படி அடுத்தடுத்து தனது திறமையால் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் ஐபிஎல் 2022 தொடரிலும் கலக்குவார் என சந்தேகமின்றி நம்பலாம்.

- Advertisement -

2. ராஜ்வர்தன் ஹங்ரேக்கர்: யாஷ் துள் தலைமையில் சமீபத்தில் அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த மற்றொரு இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்ரேக்கரை அதன் பின் நடந்த ஏலத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலத்த போட்டி போட்டு வாங்கியது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவரும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பதுடன் பேட்டிங்கில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ளார்.

மேலும் சென்னை அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவரின் இடத்தில் இவர் நேரடியாகவே அதுவும் கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியிலேயே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி சென்னை அணியின் வெற்றிகளில் பங்காற்றி விரைவில் இந்தியாவிற்காக விளையாட இவர் முயற்சிப்பார் என நம்பலாம்.

- Advertisement -

3. தேவால்டு ப்ரேவிஸ்: கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா தோற்ற போதிலும் அந்த அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் தனி ஒருவனாக வெற்றிக்காக போராடினார். ஒரு ஆல்-ரவுண்டரான இவர் அந்த உலகக் கோப்பையில் 506 ரன்கள் விளாசி அண்டர்-19 உலக கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இந்தியாவின் ஷிகர் தவான் (2004இல் 505 ரன்கள்) சாதனையை உடைத்தார்.

மேலும் 6 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் அண்டர்-19 உலககோப்பை 2022 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார். குறிப்பாக இவர் விளையாடும் ஸ்டைலை பார்க்கும் ரசிகர்கள் முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் போல உள்ளதால் “பேபி ஏபி” என இவரை அழைத்து வருகிறார்கள். இவ்வளவு திறமைகள் வாய்ந்த இவரை சமீபத்தில் நடந்த ஏலத்தில் 3 கோடிகளை செலவழித்து மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக வாங்கியது. அந்த நிலையில் விரைவில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் நிச்சயமாக இவர் கலக்குவார் என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை.

4. அபினவ் மனோகர்: கர்நாடகாவை சேர்ந்த 27 வயது இளம் மிடில் ஆர்டர் வீரர் அபினவ் மனோகர் கடந்த வருடம் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டார். அதன் காரணமாக 2.6 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள இவர் ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக குஜராத் அணிக்கு வெற்றியை தேடித் தருவார் என நம்பலாம்.

5. ரோவ்மன் போவெல்: அதிரடி மன்னர்களை உருவாக்கிக் கொண்டே வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் லேட்டஸ்டாக 28 வயது நிரம்பிய இளம் வீரர் ரோவ்மன் போவல் உருவெடுத்துள்ளார். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்க கூடிய இவரை 2.80 கோடி என்ற நல்ல தொகைக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது. எனவே ஒரு மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் இவர் இம்முறை கடைசி நேரத்தில் களமிறங்கி டெல்லி அணியின் பினிசெராக சிறப்பாக செயல்படுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

Advertisement