டெஸ்ட் கிரிக்கெட்டில் பாலோ-ஆனுக்கு பயப்படாமல் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Dravid 1
Advertisement

கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வருகையால் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிகளின் மவுசு ரசிகர்களிடையே குறைந்தாலும் தரத்தில் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு காரணம் வெறும் 3 மணி நேரத்தில் அல்லது ஒருநாளில் முடிந்து விடும் வெள்ளை பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் சுலபமான ஒன்றாகும். ஆனால் ஒரு வீரரின் முழுமையான திறமையையும் மன தைரியத்தையும் 5 நாட்கள் விடாமல் சோதித்து அதில் வெற்றி பெற முடியுமா என்ற சவாலை கொடுக்கும் டெஸ்ட் போட்டிகளே உண்மையான கிரிக்கெட்டாகும். ஏனெனில் அதில் 4 நாட்கள் சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி நாளில் தடுமாறினால் வெற்றி எதிரணி கைமாறிவிடும்.

Laxman 1

அந்த நிலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் அணிகள் பெரும்பாலும் சமமாக மோதி வெற்றிக்காக போராடுவார்கள். இருப்பினும் சில போட்டிகளில் ஏதேனும் ஒரு அணி ஆரம்பத்திலேயே எதிரணி தம்மிடம் சரணடையும் வகையில் அற்புதமாக செயல்பட்டு முதல் இன்னிங்சில் மண்டியிட வைத்து விடும். அதாவது முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுத்த ரன்களில் 200 ரன்களை 2-வதாக பேட்டிங் செய்யும் அணி முன்னிலையாக கொடுப்பதை தடுக்க தவறினால் எதிரணி சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்ற விதிமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது.

- Advertisement -

பாலோ-ஆன் நாயகர்கள்:
பாலோ-ஆன் என்று அழைக்கப்படும் அந்த விதியை பெரும்பாலான போட்டிகளில் பயன்படுத்தும் அணிகள் எதிரணிக்கு பாலோ-ஆன் கொடுத்து 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ய முயற்சிப்பார்கள். அது போன்ற போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஏற்கனவே சொதப்பும் பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சிலும் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டாகி விடுவார்கள். ஆனால் அரிதினும் அரிதாக எப்போதாவது தான் பாலோ-ஆனுக்கு அஞ்சாத ஒருசில பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் கொதித்தெழுந்து அபாரமாக பேட்டிங் செய்து தங்களது அணியின் வெற்றிக்காக போராடுவார்கள். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாலோ-ஆன் அடைந்த இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

5. ஆண்டி ப்ளவர் 232*: கடந்த 2000இல் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஜிம்பாப்வே முதல் போட்டியில் தோல்வியடைந்து நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் களமிறங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சச்சின் டெண்டுல்கர் 201*, ராகுல் ட்ராவிட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 609/6 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 382 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ-ஆன் அடைந்தது. அந்த நிலைமையில் 2-வது இன்னிங்சில் அற்புதமாக பேட்டிங் செய்த அந்த அணியின் ஜாம்பவான் ஆண்டி ப்ளவர் கடைசி வரை அவுட்டாகாமல் 232* ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

4. சலீம் மாலிக் 237: கடந்த 1994இல் ராவல்பிண்டியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 521/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவின் தரமான பந்துவீச்சில் 260 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனால் பாலோ-ஆன் கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்த கேப்டன் சலீம் மாலிக் இரட்டை சதமடித்து 237 ரன்கள் குவித்ததால் தப்பிய பாகிஸ்தான் 537 ரன்களை விளாசியது. இறுதியில் 277 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவால் போட்டியை டிரா மட்டுமே செய்ய முடிந்தது.

3. கேரி கிறிஸ்டன் 275: கடந்த 1999இல் டர்பன் நகரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் சதமடித்து 146* ரன்கள் குவிக்க 366/9 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதன்பின் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் படு மோசமாக செயல்படும் 156 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனால் பாலோ-ஆனை சந்தித்த அந்த அணிக்கு 2-வது இன்னிங்சில் மலைபோல நின்று பேட்டிங் செய்த தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன் இரட்டை சதமடித்து 275 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் வெற்றியை தவிடுபொடியாக்கினார். அதனால் 572/7 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா போட்டியை டிரா செய்து நிம்மதியடைந்தது.

dravid

2. விவிஎஸ் லக்ஷமண் 281: கடந்த 2001இல் உலகையே மிரட்டிய ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்து பின்னர் இந்தியாவை தனது அபார பந்துவீச்சால் 171 ரன்களுக்கு சுருட்டியது.

அதனால் ஃபாலோ-ஆன் பெற்று மீண்டும் தோல்வி உறுதி என கருதப்பட்ட இந்தியாவை 2- வது இன்னிங்ஸில் சச்சின், கங்குலி போன்ற முக்கிய வீரர்களும் கைவிட்டனர். அப்போது ஜோடி சேர்ந்த விவிஎஸ் லக்ஷ்மன் – ராகுல் டிராவிட் ஆகியோர் ஒருநாள் முழுக்க அவுட்டே ஆகாமல் ஆஸ்திரேலியர்களை கதறகதற அடித்து 376 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்து 657/7 ரன்களில் இந்தியா டிக்ளேர் செய்யும் அளவுக்கு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடினர்.

அதில் விவிஎஸ் லக்ஷ்மன் 281 ரன்கள் குவிக்க ராகுல் டிராவிட் 180 ரன்கள் விளாசினார். பின்னர் ஹர்பஜன் சிங் மாயாஜால சுழலால் 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த மாஸ் கம்பேக் வெற்றியை பதிவு செய்து பின்னர் தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி மிரட்டியது. பாலோ-ஆன் அடைந்தும் வென்ற போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேனாக விவிஎஸ் லக்ஷ்மன் அசத்தியத்தை எப்போதும் மறக்க முடியாது.

1. ஹனிப் முஹம்மது 337: 1958இல் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 579/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து பின்னர் தனது வெறித்தனமான பவுலர்களால் பாகிஸ்தானை 106 ரன்களுக்கு சுருட்டியது.

அதனால் படுதோல்வி உறுதி என்று கருதப்பட்ட பாகிஸ்தானுக்கு 2-வது இன்னிங்ஸ்சில் நங்கூரத்தை போல அபாரமாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் மற்றும் ஜாம்பவான் ஹனிப் முகமது 2-வது நாளில் களமிறங்கி 3, 4, 5 என 3 நாட்கள் தனி ஒருவனை போல அற்புதமாக பேட்டிங் செய்து வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடி முச்சதம் விளாசி 337 ரன்கள் குவித்தார். அதனால் 657/8 ரன்களில் டிக்ளேர் செய்த பாகிஸ்தான் போட்டியை அட்டகாசமாக டிரா செய்தது.

Advertisement